தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted On: 01 JUN 2021 7:40PM by PIB Chennai

தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்றின் போது பணியாளர்களின், குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. பேறுகால பலன் (திருத்த) சட்டம் 2017 பிரிவு 5(5)-ன் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட வேண்டும்.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை கருத்தில் கொண்டு, மேற்கண்ட அறிவுறுத்தலை அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது.

பிரிவு 5(5) குறித்த விழிப்புணர்வை பெண் பணியாளர்கள் மற்றும் பணி வழங்குவோர் மத்தியில் ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த பிரிவின் படி, சாத்தியமுள்ள இடங்களில் எல்லாம் அதிகப்படியான பாலூட்டும் தாய்மார்கள் குழந்தை பிறந்து குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்கப்படுத்துமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

பாலூட்டும் தாய்மார்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதோடு, அவர்கள் தொடர்ந்து பணியில் இருக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.

*****************(Release ID: 1723527) Visitor Counter : 64