அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட் தொற்றுக்கு பிந்தைய காலத்தில் அறிவியல், தொழில்நுட்பத்துடன் இணைந்து புதிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்: அறிவியலாளர்கள் கருத்து
Posted On:
27 MAY 2021 5:37PM by PIB Chennai
கொவிட் தொற்றுக்கு பிந்தைய உலகில் எதிர்கால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதனை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், “பெருந்தொற்றின் மறுபக்கம்... ஓர் அறிவியல் கொள்கை இணைப்பு” என்ற இணையவழி கருத்தரங்கில் தெரிவித்தனர்.
“கொவிட்-19 பெருந்தொற்று, இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது, பொருளாதார நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும், சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும், மாபெரும் வாய்ப்பையும் அது வழங்குகிறது. தொலைதூர பகுதிகளில் மருத்துவ சிகிச்சை அல்லது தொலை மருத்துவம் அல்லது தொலைதூர கிராமங்களில் தரமான சுகாதாரம் அல்லது இணையதள கல்வி, எதுவாக இருந்தாலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் மட்டுமே அவற்றை எதிர்கொள்ள முடியும்”, என்று நிதி ஆயோக்கின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான திரு அமிதாப் கான்ட் கூறினார்.
பொதுமக்கள், கொவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றுவதோடு, தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மரபணு வரிசைமுறை போன்ற அறிவியல் துறைகள் பெருந்தொற்று காலத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும், கொவிட்-19 பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அவை தீர்வுகளை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐந்தாவது தலைமுறை தொழில்நுட்பம், துரித தொலைதொடர்பிற்காக தொழில்நுட்பம் மற்றும் செல்பேசித் தொழில்நுட்பத்தில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மை, செயற்கை நுண்ணறிவில் உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொலைத்தொடர்புக்கான தேசிய கவுன்சிலும், விக்யான் பிரச்சாரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொன்விழா கொண்டாட்ட கருத்தரங்குத் தொடரில் திரு அமிதாப் கான்ட், காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா, கடந்த 50 ஆண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி, குறிப்பாக கடந்த ஓராண்டு காலத்தில் கொவிட்-19 பெருந்தொற்றின் போது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்தத் துறை மேற்கொண்டுள்ள பணிகள் பற்றிப் பேசினார்.
கொவிட்-19 தொற்றின் 2-வது அலை குறித்து உரையாற்றிய அவர், “எதிர்காலத்தில் கொவிட்-19 தொற்றின் உருமாற்றம் தொடர்ந்து நிகழும், உருமாற்றம் தொடர்பாகவும் அதன் தாக்கம் தொடர்பாகவும் நாம் துரிதமாக ஆய்வுகளை மேற்கொள்வோம். அதேவேளையில் கொவிட்-19 சரியான நெறிமுறைகளைப் பின்பற்றியே அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்”, என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722184
*****************
(Release ID: 1722238)
Visitor Counter : 251