வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தோட்டக்கலை பொருட்கள் மீது கவனம் செலுத்தும் அபேடாவின் இரண்டாவது காணொலி பொருட்காட்சி தொடக்கம்

Posted On: 27 MAY 2021 5:27PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றின் போது இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி திறனை ஊக்கப்படுத்தும் வகையில், தோட்டக்கலை பொருட்களுக்கான அபேடாவின் இரண்டாவது காணொலி பொருட்காட்சி இன்று தொடங்கியது.

2021 மே 29 வரை நடக்கவிருக்கும் இந்த மூன்று நாள் பொருட்காட்சியில் இந்தியாவின் பிரத்தியேக பழங்கள், காய்கறிகள் மற்றும் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பூக்கள் சர்வதேச இறக்குமதியாளர்களுக்காக காட்சிப்படுத்தப்படும்.

471-க்கும் அதிகமான ஏற்றுமதியாளர்கள் அல்லது பங்கேற்பாளர்கள் தங்களது பொருட்களை மெய்நிகர் தளத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். 543 பார்வையாளர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் இந்த பொருட்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.

பண்ணை பசுமை காய்கறிகள், மாம்பழங்கள், திராட்சைகள் உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் பொருட்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நைஜீரியா, பஹ்ரைன், இஸ்ரேல், சுரிநாம், ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஐஸ்லாந்து, மாலத்தீவு மற்றும் புரூனேவில் இருந்து பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி திறனை ஊக்கப்படுத்தும்  பொருட்காட்சியை காணொலி மூலம் அபேடா நடத்துகிறது.

*****************(Release ID: 1722208) Visitor Counter : 184