ரெயில்வே அமைச்சகம்
யாத்திரிகர்களுக்கு சார் தாம் தலங்களுடன் விரைவான, பாதுகாப்பான மற்றும் சௌகரியமான இணைப்பு வழங்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
27 MAY 2021 3:56PM by PIB Chennai
“யாத்திரிகர்களுக்கு சார் தாம் தலங்களுடன் விரைவான, பாதுகாப்பான மற்றும் சௌகரியமான இணைப்பு வழங்கப்பட வேண்டும்”, என்று மத்திய ரயில்வே வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.
சார் தாம் திட்டங்களுக்கான இறுதி மைல் இணைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் சௌகரியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாற்று வழிகளை ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்காக சார் தாம் தலங்கள் வரையிலான இணைப்பை ஏற்படுத்துவதற்கான செலவு குறித்த விரிவான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அவர் வலியுறுத்தினார்.
சுற்றுலாவின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், யாத்திரிகர்கள் ஆலயங்களுக்கு பாதுகாப்பாகவும் உரிய நேரத்திலும் செல்வதற்காகவும் விரிவான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய சார் தாம் தலங்கள் வரையிலான புதிய அகல ரயில் இணைப்பிற்கான இறுதிக் கட்ட ஆய்வு முடியும் தருவாயில் உள்ளது.
ரிஷிகேஷ்- கர்ணப்ராயக் இடையிலான 125 கிலோ மீட்டர் தூர புதிய அகல ரயில் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியான கர்ணப்ராயக் ரயில் நிலையத்திலிருந்து கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு ரயில் இணைப்பு தொடங்கப்படும். தற்போது இயங்கி வரும் தொய்வாலா ரயில் நிலையத்திலிருந்து கங்கோத்ரிக்கும், யமுனோத்ரிக்கும் ரயில் பாதை அமைக்கப்படும். சார் தாம் அகல ரயில் இணைப்பு ஆய்வின்படி, புதிய அகல ரயில் பாதைக்கான முனையம், செங்குத்தான நிலப்பரப்பின் காரணமாக பார்கோட், உத்தர்காசி, சோன்பிரயாக் மற்றும் ஜோஷிமத்தில் நிறைவடையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722139
*****************
(Release ID: 1722199)
Visitor Counter : 200