பிரதமர் அலுவலகம்

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின்(என்டிஎச்எம்) முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யும் உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார்


மக்களுக்கு தேவையான பல சேவைகளுக்கு என்டிஎச்எம், டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்ப தீர்வை அளிக்கவுள்ளது

என்டிஎச்எம்-ன் கீழ் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்: பிரதமர்

அதிக அளவிலான சுகாதார சேவைகளை பெற செய்து மக்களின் வாழ்க்கையை என்டிஎச்எம் எளிதாக்கும்

Posted On: 27 MAY 2021 3:25PM by PIB Chennai

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை (National Digital Health Mission (NDHM)) ஆய்வு செய்வதற்கான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின உரையாற்றியபோது, என்டிஎச்எம்  தொடங்கப்படுவதை பிரதமர் அறிவித்தார்.

அப்போது முதல் டிஜிட்டல் தொகுதிகள் மற்றும் பதிவேடுகள் உருவாக்கப்பட்டு, இத்திட்டம் 6 யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டது.  இதுவரை, 11.9 லட்சம் சுகாதார ஐ.டி.க்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தளத்தில் 3106 டாக்டர்கள் மற்றும் 1460 வசதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

டிஜிட்டல் சுகாதாரத்துக்கான திறந்த மற்றும் இயங்கக்கூடிய ஐடி நெட்வொர்க் அமைக்க ஒருங்கிணைந்த சுகாதார இணையதளம் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த தளம், பொது மற்றும் தனியார் தீர்வுகள் மற்றும் செயலிகளை இணைத்து  தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் அமைப்பில் ஒரு அங்கமாக இருக்க முடியும்.  இந்த தளம்தொலை தூர மருத்துவ ஆலோசனை, பரிசோதனைக் கூட ஆய்வுகள் போன்ற சுகாதார சேவைகளை பயன்படுத்துவோர் தேடி, பதிவு செய்து பயன் பெற அனுமதிக்கும்.

சரிபார்க்கப்பட்ட சுகாதார சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் மட்டுமே இந்த தளத்தில் இணைவதை இந்த அமைப்பு உறுதி செய்யும். மக்களுக்கு புதுமைகள் மற்றும் பல சேவைகளுடன், இந்த தளம், டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்ப புரட்சியை அளிக்கும்.  இவ்வாறு, சுகாதார கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை நாடு முழுவதும் திறம்பட பயன்படுத்த முடியும்.

இந்திய தேசிய பணம் செலுத்தும் கார்பரேஷன் (என்பிசிஐ) உருவாக்கிய யுபிஐ மின்னணு-பற்றுச்சீட்டு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  இந்த டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை வசதி, பணபரிமாற்றங்களை இந்த தளத்தை பயன்படுத்துவோர் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள உதவும்.

அரசின் பல திட்டங்களை செயல்படுத்துவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். சுகாதார சேவைகளுக்கு யுபிஐ மின்னணு பற்றுச்சீட்டை உடனடியாக பயன்படுத்த முடியும். 

என்டிஎச்எம் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளவும் பிரதமர் உத்தரவிட்டார். ஏராளமான சுகாதார வசதிகளை அளித்து, மக்களின் வாழ்க்கையை என்டிஎச்எம் எளிதாக்கும் என பிரதமர் கூறினார்.

தொழில்நுட்ப தளம் மற்றும் பதிவுகளை உருவாக்குவதல் போன்றவை தவிர்க்க முடியாத அத்தியாவசிய அம்சங்கள் என்றாலும், நாடு முழுவதும் உள்ள மக்களை தொலை தொடர்பு ஆலோசனைகள் மற்றும் அனைத்துவித மருத்துவ சேவைகளை பெறசெய்து அவற்றுக்கு டிஜிட்டல் மூலமாக பணம் செலுத்த வைப்பதன் மூலமாக மட்டுமே, இந்த தளத்தின் பயன்பாடு வெளியே தெரியும் என பிரதமர் கூறினார்.  இந்த திசையில் தேசிய சுகாதார ஆணையம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளவும் பிரதமர் உத்தரவிட்டார்.

*****************



(Release ID: 1722180) Visitor Counter : 1187