ஆயுஷ்

மருத்துவ தகவல் களஞ்சிய இணையதளம் மற்றும் ஆயுஷ் சஞ்ஜீவனி செயலியை ஆயுஷ் அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 26 MAY 2021 8:05PM by PIB Chennai

ஆயுஷ் துறையில் மற்றுமொரு மைல்கல்லாக, ஆயுஷ் மருத்துவ தகவல் களஞ்சிய இணையதளம் மற்றும் ஆயுஷ் சஞ்ஜீவனி செயலியின் மூன்றாவது பதிப்பை  காணொலி முறையில் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ தொடங்கி வைக்கிறார்.

ஆயுஷ் மருத்துவர்கள் மற்றும் பொது மக்களுக்கு உதவும் வகையில் ஆயுஷ் மருத்துவ தகவல் களஞ்சிய இணையதளம் (https://accr.ayush.gov.in/) அமைந்துள்ளது. ஆயுஷ் மருத்துவர்களின் மருத்துவ செயல்பாடுகள் குறித்த தகவல்களைத் தொகுப்பது இந்த தளத்தின் நோக்கம் ஆகும். தகவல்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சியையும் இது ஊக்குவிக்கும்.

பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் வலிமைகளை இது ஆவணப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுஷ் மருத்துவ முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட கொவிட்-19 பாதிப்புகள் குறித்து பிரத்தியேக பிரிவு ஒன்று இணையதளத்தில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஆயுஷ் சஞ்ஜீவனி செயலியின் மூன்றாவது பதிப்பு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ்-ல் வெளியிடப்படுகிறது. அறிகுறிகள் இல்லாத மற்றும் லேசான முதல் ஓரளவு பாதிப்பு உள்ள கொவிட் நோயாளிகளின் பராமரிப்பில் ஆயுஷ் 64 மற்றும் கபசுரக் குடிநீர் மருந்துகளின் செயல் திறனை ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் வசதியை இந்த பதிப்பு வழங்குகிறது. வீட்டு தனிமையில் உள்ள நோயாளிகளுக்கு செயல்திறன்மிக்க இந்த இரண்டு ஆயுஷ் மருந்துகளை வழங்குவதற்கான தேசிய விநியோக பிரச்சாரத்தை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுஷ் அமைச்சத்தின் முகநூல் மற்றும் யூடியூப் சமூக ஊடக பக்கங்களில் நாளைய நிகழ்ச்சியின் நேரலையை மாலை 3.30 மணி முதல் காணலாம்.

----



(Release ID: 1721991) Visitor Counter : 261