பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        காஷ்மீரில் கொவிட் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தல்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                22 MAY 2021 4:38PM by PIB Chennai
                
                
                
                
                
                
                காஷ்மீரில் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அங்குள்ள தலைவர்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கேட்டுக்கொண்டார். அரசியல் மற்றும் கொள்கை வித்தியாசங்களைக் கடந்து காஷ்மீர் எனும் சொர்க்கத்தை கொரோனாவின் பிடியில் இருந்து காப்பாற்றுவது நம் அனைவரின் கடமையாகும் என்று அவர் கூறினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடன் உரையாடிய அமைச்சர், பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையிலான அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மதத் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 
தடுப்பு மருந்து வழங்கலை காஷ்மீரில் வெற்றிகரமாக மேற்கொண்டால் நேர்மறையான எண்ணத்தை நாடு முழுவதும் அது உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கு உட்பட நாடு முழுவதுமான நிலைமையை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் கூறினார். தேவையேற்படும் போதெல்லாம் மாவட்ட நிர்வாகங்களையும் மருத்துவ சமூகத்தையும் பிரதமர் தொடர்பு கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
மக்களுக்கு தோழமையான தடுப்பு மருந்து வழங்கல் முகாம்களை ஏற்பாடு செய்ய சமுதாய தலைவர்களின் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு காஷ்மீரில் உள்ள மாவட்ட ஆட்சியர்களை தாம் அறிவுறுத்தி உள்ளதாக கூறிய அமைச்சர், போதுமான அளவிலான தடுப்பு மருந்துகள் விரைவில் கிடைக்க செய்யப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள், கொவிட் தொடர்பான நிவாரண பொருட்களை காஷ்மீருக்கு அனுப்பியதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததோடு, இன்னும் அதிக அளவில் இதர மாவட்டங்களுக்கு பொருட்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.
***************** 
                
                
                
                
                
                (Release ID: 1720970)
                Visitor Counter : 235