வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

கொவிட் தொற்றுக்கு சுய சிகிச்சை மேற்கொள்வதற்கு எதிராக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எச்சரிக்கை

Posted On: 20 MAY 2021 6:03PM by PIB Chennai

வட கிழக்கு மாகாணங்களுக்கான  மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை ஆகிய துறைகளுக்கான இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங், புதுதில்லி விக்யான் பவனின் அலுவலர்களுக்கு கொவிட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தினார்.

பெருந்தொற்று சம்பந்தமான நடைமுறைக்கு உகந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கொவிட்-19 தொற்றிற்குத் தாமாகவே சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு எதிராக அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

வட கிழக்கு மாகாணங்களுக்கான  மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்துப் பேசிய அமைச்சர்தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள், உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுமாறு அறிவுறுத்தினார்.

கொவிட் சிகிச்சை தொடர்பாக உண்மைகளை ஆராயாமல் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 

அமைச்சகத்தில் பணிபுரியும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், இதற்காக சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யுமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது போன்ற முகாம்களில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆய்வு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். மருத்துவ மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுடன் சமூக மேலாண்மையும் மிகவும் அவசியம் என்றும், இதனைக் கருத்தில் கொண்டு அனைவரும் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிராணவாயுவை பதுக்குவது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

வடகிழக்கு மாநிலங்களில் கொவிட் தொற்றின் நிலவரம், போதிய சுகாதார மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான தினசரி அறிக்கையை தாம் பெற்று வருவதாக அவர் கூறினார். வடகிழக்கு பகுதியில் உள்ள அனைத்து 8 மாநிலங்களிலும் போதிய பிராணவாயு கையிருப்பில் இருப்பதாகவும், போர்க்கால அடிப்படையில் புதிய ஆலைகள் நிறுவப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களுக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த நிதியான ரூ. 25 கோடி, அங்குள்ள மருத்துவமனைகளில் முக்கியமான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு வரப்பிரசாதமாக இருந்ததாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720339

 *****************(Release ID: 1720377) Visitor Counter : 50