எஃகுத்துறை அமைச்சகம்

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மிகப்பெரிய கொவிட் பராமரிப்பு மையத்தை மேற்கு வங்கத்தில் திரு தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார்

Posted On: 19 MAY 2021 6:51PM by PIB Chennai

மேற்கு வங்கத்தில் உள்ள செயில்-ஐஎஸ்பி பர்னாப்பூரில், 200 படுக்கைகளுடன் கூடிய மிகப்பெரிய கொவிட் பராமரிப்பு மையத்தை மத்திய எஃகு மற்றும் பெட்ரோலிய & இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று திறந்து வைத்தார்.

எஃகு இணை அமைச்சர் திரு ஃபக்கன் சிங் குளஸ்தே, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் திரு பாபுல் சுப்ரியோ, செயில் தலைவர் திருமிகு சோமா மண்டல் ஆகியோர் காணொலி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பிரதான், நாட்டின் பெரும்பாலான திரவ மருத்துவ ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக எஃகு துறையை பாராட்டினார். முதல் அலையின் போது ஒரு நாளைக்கு 3000 மெட்ரிக் டன்னாக இருந்த ஆக்சிஜனின் உச்சபட்ச தேவை தற்போது ஒரு நாளைக்கு 10,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ள நிலையில், இதில் 4,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருத்துவ ஆக்சிஜன், எஃகு ஆலைகளால் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்தார். தனியார் ஆலைகளும் இதில் அடங்கும்.

ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்குக் அருகிலேயே கொவிட் பராமரிப்பு மையங்களை நிறுவ மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த அறைகூவலை குறிப்பிட்ட திரு பிரதான், இத்தகைய வசதியை முதல் முறையாக செயில் இன்று பர்ன்பூரில் திறந்துள்ளது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு குலஸ்தே, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமையில், செயில் சிறப்பாக பங்களிப்பை ஆற்றி வருவதாக தெரிவித்தார்.

2021 ஏப்ரல் 1 அன்று 538 மெட்ரிக் டன்னாக இருந்த எஃகு ஆலைகளின் திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி அளவு, நேற்று 3914 மெட்ரிக் டன்னாக இருந்தது. இதில் செயிலின் பங்களிப்பு 1345 மெட்ரிக் டன் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx? PRID=1720003 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

 

***



(Release ID: 1720096) Visitor Counter : 150