ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே மருத்துவமனைகளில் 86 ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படவுள்ளன
Posted On:
18 MAY 2021 1:17PM by PIB Chennai
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், தனது மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் 86 ரயில்வே மருத்துவமனைகளில் மிகப் பெரிய அளவில் திறனை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு நான்கு ஆக்ஸிஜன் ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் 52 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 30 ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கும் பணி பல கட்டங்களில் நடந்து வருகின்றது. அனைத்து ரயில்வே கொவிட் மருத்துவமனைகளிலும், ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படவுள்ளன.
ரயில்வே வாரியம் கடந்த 4ம் தேதி அனுப்பிய கடிதத்தில், ஒவ்வொரு ஆக்ஸிஜன் ஆலை அமைப்பதற்கும் ரூ.2 கோடி வரை அனுமதிக்க பொது மேலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ரயில்வே மருத்துவமனை மேம்பாட்டுக்காக பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கொவிட் சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கை 2539-லிருந்து 6972-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொவிட் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கை 273-லிருந்து 573-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை 62-லிருந்து 296-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே மருத்துவமனைகளில் பிபாப் இயந்திரங்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போன்றவை வழங்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொவிட் பாதிப்பு ஏற்பட்ட ஊழியர்களை, குழுவில் உள்ள மருத்துவமனைகளில் பரிந்துரை அடிப்படையில் அனுமதிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் ரயில்வே வழங்கியுள்ளது.
ரயில்வே மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும், மிகப் பெரிய அளவிலான திறன் மேம்பாடு, மருத்துவ அவசர நிலையை கையாள சிறந்த கட்டமைப்பு வசதியை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719555
-----
(Release ID: 1719595)
Visitor Counter : 269