சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

அவுரங்காபாத்தில் நிறுவப்பட்டுள்ள சுவாசக் கருவிகள் குறித்த தகவல்கள்

Posted On: 14 MAY 2021 7:34PM by PIB Chennai

கடந்த வருடத்திலிருந்து 'அரசின் முழுமையான' அணுகலின் கீழ், மருத்துவமனை பராமரிப்பில் இருக்கும் கொவிட் நோயாளிகளின் சிறப்பான மேலாண்மைக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது.

ஏற்கனவே உள்ள மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சுவாசக் கருவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை 2020 ஏப்ரல் முதல் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள 'மேக் இன் இந்தியா' சுவாசக் கருவிகள் சரியாகப் பணியாற்றவில்லை என்று சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்திகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை, தவறானவை மற்றும் இதுகுறித்த முழுமையான தகவல்களை கொண்டிருக்காதவை ஆகும்.

கடந்த ஆண்டு பெருந்தொற்று  தொடங்கியபோது நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மிகவும் குறைந்த அளவிலேயே சுவாசக் கருவிகள் இருந்தன. மேலும், நாட்டில் சுவாசக் கருவிகளின் உற்பத்தி குறைந்த அளவிலேயே நடைபெற்று வந்தது மற்றும் வெளிநாட்டிலுள்ள விநியோகஸ்தர்கள் அதிக அளவிலான சுவாச கருவிகளை இந்தியாவுக்கு தர முடியாத நிலையில் இருந்தனர். இதன்கரணமாக 'மேக் இன் இந்தியா' சுவாச கருவிகளை உற்பத்தி செய்து

நாட்டில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்யுமாறு உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.

அவர்களில் பெரும்பாலானோர் முதல் முறையாக சுவாச கருவிகளை உற்பத்தி செய்பவர்கள் ஆவார்கள். அவர்களது சுவாசக் கருவிகள் மீது கடுமையான சோதனைகள், தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் ஆகியவை குறுகிய காலத்தில் துறை சார்ந்த அறிவு கொண்ட  நிபுணர்களால் நடத்தப்பட்டு, அவர்கள் ஒப்புதல் அளித்ததற்கு பின்னர், விநியோகத்திற்கு அனுப்பப்பட்டன.

சுவாச கருவிகளை பெற்றுள்ள சில மாநிலங்கள் அவற்றை இன்னும் தங்களது மருத்துவமனைகளில் நிறுவவில்லை. அத்தகைய ஏழு மாநிலங்களுக்கு 2021 ஏப்ரல் 11 அன்று கடிதம் ஒன்றை எழுதிய மத்திய சுகாதார செயலாளர், நான்கைந்து மாதங்களாக 50 சுவாசக் கருவிகள் நிறுவப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

சுவாச கருவிகளை விரைந்து நிறுவுமாறு அம்மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன. அவுரங்காபாத்தை பொறுத்தவரை, ஜ்யோதி சிஎன்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சுவாசக் கருவிகள் அவுரங்காபாத் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டன. மேக் இன் இந்தியா சுவாசக் கருவிகள் தயாரிப்பாளர்களில் ஒருவரான  ஜ்யோதி சிஎன்சி நிறுவனம், அதிகாரமளிக்கப்பட்ட குழு மூன்றின் வழிகாட்டுதல்களின் படி கொவிட் மேலாண்மைக்குத் தேவையான சுவாசக் கருவிகளை மத்திய அளவில் விநியோகித்து உள்ளது. இந்த சுவாச கருவிகள் பின்னர் மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிறுவனத்திற்கு பிஎம் கேர்ஸ் நிதியத்தின் நிதி உதவி வழங்கப் படவில்லை. சுவாச கருவிகள் தற்போது நன்றாக செயல்பட்டு வருகின்றன.

*****************



(Release ID: 1718702) Visitor Counter : 230