வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தேவைப்படும் நாடுகளுக்கு கொவிட் தடுப்பூசிகளை தாராளமாக பகிரவும்: உலக நாடுகளிடம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தல்

Posted On: 12 MAY 2021 4:09PM by PIB Chennai

தேவைப்படும் நாடுகளுக்கு, கொவிட் தடுப்பூசிகளை  தாராளமாக பகிரும்படிஉலக நாடுகளை  மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  வலியுறுத்தியுள்ளார்.

உலக பொருளாதார அமைப்பின் உலகளாவிய வர்த்தக கண்ணோட்டம்  குறித்த கூட்டத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது

வர்த்தகம் மற்றும் முதலீடு பாதுகாப்பில், சமநிலையான, லட்சிய நோக்குடன் கூடிய, விரிவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையை தொடங்குவதில் இந்தியா வசதியாக உணர்கிறது. பிராந்திய விரிவான வர்த்தக கூட்டுறவு சமநிலையான ஒப்பந்தமாக இல்லை. இது இந்திய விவசாயிகள், எங்களது குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பால் உற்பத்தி தொழிலை பாதிக்கும். அதனால் இந்த பிராந்திய விரிவான வர்த்தக கூட்டுறவில் இந்தியா  இணையாமல் இருப்பதுதான் விவேகமானது.   வர்த்தகம் மற்றும் முதலீடு பேச்சுவார்த்தைகள், இந்தியா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை இந்தியா எதிர்நோக்கியுள்ளது

ஜனநாயகம், வெளிப்படைத் தன்மை, விதிமுறைகள், நீதிமன்றங்களின் சுதந்திரம், முதலீடு விதிமுறைகள் போன்றவற்றில் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் இந்தியா ஒத்துப்போகிறது. அவற்றுடன் இந்தியாவின் வர்த்தகம் பெரியளவில் சமநிலையாக உள்ளது.

கொவிட் தொற்றை எதிர்த்து இந்தியா தீவிரமாக போராடி வருகிறது. முக்கிய பொருட்களின் கொள்முதல், மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அரசு அதிகரித்துள்ளது மற்றும் கண்காணித்து வருகிறது. திரவ ஆக்ஸிஜன் கொண்டு செல்ல ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரயில்வே இயக்குகிறது. தடுப்பூசி போடும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப் படுகிறது.

எங்களது தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், இந்த உலகளாவிய சவாலை சமாளித்து, வெளிவருவோம். மீளும் உலகளாவிய விநியோக சங்கிலியில் ஒரு பகுதியாக இருக்க இந்தியா விரும்புகிறது. கொவிட் தொற்றின் முதலாம் அலையின் போதும், சர்வதேச உறுதிகளையும், கடமைகளையும் இந்தியா நிறைவேற்றியது.

இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் மீள, வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை அம்சங்கள் (டிரிப்ஸ்) தள்ளுபடியை  நாங்கள் ஏற்றுக்கொள்வதோடு மட்டும் அல்லாமல், விரைவான ஒருமித்த கருத்தை உருவாக்குதல், தொழில்நுட்ப பரிமாற்றம், மூலப் பொருட்கள் கிடைக்கும் தன்மை ஆகியவற்றையும் நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்.  

தடுப்பூசி காப்புரிமை விஷயத்தில், அமெரிக்கா குறைந்த அளவிலான ஆதரவை அளித்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இதுதான் இப்போதைய தேவை. தேவைப்படும் நாடுகளுக்கு கொவிட் தடுப்பூசியை, உலக நாடுகள் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயல் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717962

-----



(Release ID: 1718101) Visitor Counter : 216