சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19-க்கான அமைச்சர்கள் குழுவின் 25-வது கூட்டத்திற்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார்

Posted On: 08 MAY 2021 3:11PM by PIB Chennai

கொவிட்-19-க்கான அமைச்சர்கள் குழுவின் 25-வது கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் இன்று தலைமை தாங்கினார்.

வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர் வழி (தனிப் பொறுப்பு) & ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா, உள்துறை இணை அமைச்சர் திரு நித்தியானந்த் ராய் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் கே பாலும் கலந்து கொண்டார்.

தொற்றிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமைச்சர்கள் குழுவிடம் டாக்டர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்தார்கள் என்று அவர் கூறினார். கடந்த ஏழு நாட்களாக 180 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஒன்று கூட இல்லை என்றும் அவர் கூறினார்.

நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16.73 கோடியை தாண்டி உள்ளதாகவும் இவற்றில் 23 லட்சம் டோஸ்கள் நேற்று ஒரே நாளில் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 17,49,57,770 டோஸ்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், 84,08,187 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் 84,08,187 டோஸ்கள் மாநிலங்களிடம் இன்னும் மிச்சம் இருப்பதாகவும் அவர் கூறினார். 53,25,000 டோஸ்கள் மாநிலங்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டு டோஸ்கள் தடுப்பு மருந்து எடுத்தால் மட்டுமே முழு பாதுகாப்பு கிடைக்கும் என்று கூறிய அவர், நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும் இரண்டாவது டோசை கட்டாயம் எடுத்துக் கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். இந்திய அரசு மூலமாக கிடைத்துள்ள தடுப்பு மருந்துகளில் 70 சதவீதத்தை இரண்டாவது டோசுக்காக ஒதுக்குமாறு மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த், வெளியுறவுத்துறை செயலாளர் திரு ஹர்ஷ வர்தன் ஷிரிங்க்லா, வர்த்தக செயலாளர் திரு அனுப் வதவான், சுகாதார ஆராய்ச்சி செயலாளரும், சி எம் ஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் பல்ராம் பார்க்கவா, தேசிய சுகாதார இயக்கத்தின் (சுகாதாரம்) இயக்க இயக்குநர் மற்றும் கூடுதல் செயலாளர் திருமிகு வந்தனா குர்நானி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக கூடுதல் செயலாளர் திருமதி ஆர்த்தி அகுஜா, சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் சுனில் குமார், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் திரு அமித் யாதவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

----


(Release ID: 1717046) Visitor Counter : 270