சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தில்லி டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் கொவிட்- 19 மேலாண்மை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு

Posted On: 07 MAY 2021 3:35PM by PIB Chennai

தில்லி டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் கொவிட்- 19 நோயாளிகளுக்கான மருத்துவ மேலாண்மை குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன், நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள தடுப்பூசி மையத்திற்குச் சென்ற அமைச்சர், அங்கு இருந்த பயனாளிகளுடன் உரையாடினார். தடுப்பூசி செலுத்தும் முறைகள் சுமூகமாக நடைபெறுவதாக அவர்கள் கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து மருத்துவப் பணியாளர்களுடன் உரையாடிய அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன், மருத்துவச் சமூகத்தின் பணிச் சுமையைக் குறைப்பதற்காக, கூடுதல் பணியாளர்களை நியமிக்க அரசு அண்மையில் முடிவெடுத்தது பற்றி அவர்களிடம் கூறினார். மேலும் பெருந்தொற்றுக் காலத்தில் அயராது, முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தமது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

பிராணவாயு வசதி மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகள் ஆகிய வசதிகளுடன் கூடிய  படுக்கைகளின் இருப்பை அமைச்சர் ஆய்வு செய்தார். கொவிட் நோயாளிகளின் உடனடித் தேவையை நிறைவேற்றுவதற்காக படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து  மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர். ஏ. கே. சிங் ராணா விளக்கமளித்தார்.

இந்த மருத்துவமனையில் முன்னதாக 158 கொவிட் பிராணவாயுப் படுக்கைகள் மற்றும் 14 கொவிட் அவசர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் உட்பட மொத்தம் 172 படுக்கைகள் இருந்தன. இது தவிர கொவிட் அறிகுறியுடன் அனுமதிக்கப்படும் பிரிவில் மொத்தம் 44 படுக்கைகள் இருந்தன. பெருந்தொற்றின் 2-வது அலையின் போது கொவிட் படுக்கைகளின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சரின் பரிந்துரையின்படி கூடுதலாக மேலும் 200 கொவிட் படுக்கை வசதிகளை ஏற்படுத்த மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ தயாரித்த பிராணவாயு உற்பத்தி மையத்தையும் டாக்டர். ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார். 12 மெட்ரிக் டன் மற்றும் 10 மெட்ரிக் டன் திறன் கொண்ட திரவ பிராணவாயு உற்பத்தி செய்யும் இரண்டு கருவிகள் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716789

*****************



(Release ID: 1716837) Visitor Counter : 203