உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கோவா விமான நிலையத்திலிருந்து அத்தியாவசியப் மருத்துவப் பொருள்களின் தடையற்ற விநியோகம் தொடர்கிறது.

Posted On: 07 MAY 2021 10:15AM by PIB Chennai

அத்தியாவசிய மருத்துவப் பொருள்களின் தடையற்ற விநியோகத்துக்கு உதவுவதன் மூலம், கோவா சர்வேதச விமான நிலையம், கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான பங்கினை வகிக்கிறது.  

இதற்கு முன்பு தேசிய அளவிலான ஊரடங்கு சமயத்தில்,  8 உதான் விமானங்கள் மூலம் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்து பொருள்கள் கோவா விமான நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளன. மொத்தம் 2.15 மெட்ரிக் டன் மருத்துவப் பொருள்கள் கோவா விமான நிலையத்துக்கு வந்தன. 3.96 மெட்ரிக் டன் மருந்துப் பொருள்கள் கோவா விமான நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளன. 

கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் கோவா விமான நிலையம், கோவா மாநிலத்துக்கு 3 முறை வந்த கொவிட் தடுப்பூசிகளையும், அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு ஒரு முறை சென்ற கொவிட் தடுப்பூசிகளையும் கையாண்டுள்ளது.  

மேலும், கொவிட் தடுப்பூசிகள், ஃபேபிப்ளூ மருந்துகள், கொவிட்-19 பரிசோதனைக் கருவிகள், மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களையும் கோவா சர்வதேச விமான நிலையம் தடையின்றிக் கையாண்டுள்ளது.  கொவிட் இரண்டாம் அலையின் போதும், கோவா விமான நிலையம், கோவா மாநிலத்துக்கு விரைவாக தடுப்பூசிகளைக் கொண்டு வந்து சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.

1. கடந்த ஏப்ரல் 18ம் தேதி சென்னையிலிருந்து 13 பெட்டிகளில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கோவா விமான நிலையத்துக்கு வந்தன.

2.       கடந்த ஏப்ரல் 30ம் தேதி அன்று மும்பையிலிருந்து 9 பெட்டிகளில் கொவிட் தடுப்பூசிகள் வந்தன.

3. கடந்த ஏப்ரல் 23ம் தேதி, தில்லியிருந்து 122 கிலோ கொவிட்-19 பரிசோதனைக் கருவிகள் வந்தன.

மேலும், கிளின்மார்க்-ன் ஃபேபிப்ளூ மருந்துகள், அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, கொல்கத்தா, லக்னோ, ஜெய்ப்பூர், ஐதராபாத், இந்தூர், நாக்பூர் போன்ற இடங்களுக்கு அனுப்பியதிலும் கோவா விமான நிலையம் முக்கியமான பங்காற்றியுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவா விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு மொத்தம் 31,955 கிலோ ஃபேபிப்ளூ மருந்துகள் சென்றுள்ளன. மிதமான கொவிட் பாதிப்பு நோயாளிகளுக்கு இந்த ஃபேபிப்ளூ மருந்து பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*********************



(Release ID: 1716778) Visitor Counter : 229