விவசாயத்துறை அமைச்சகம்
பருப்பு வகைகளின் உற்பத்தியில் தன்னிறைவு: சிறப்பு காரீப் உத்தியை வடிவமைத்துள்ளது மத்திய அரசு
Posted On:
06 MAY 2021 3:53PM by PIB Chennai
பருப்பு வகைகளின் உற்பத்தியில் தன்னிறைவை அடையும் நோக்கத்தோடு, காரீப் 2021-ஆம் பருவத்தில் அமல்படுத்துவதற்கான சிறப்பு காரீப் உத்தியை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வடிவமைத்துள்ளது.
துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பின் உற்பத்தியை மேம்படுத்துவது மற்றும் விளைநிலங்களை அதிகரிப்பது தொடர்பான விரிவான திட்டம், மாநில அரசுகளுடன் ஆலோசிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய விதை முகமைகள் அல்லது மாநிலங்களிடம் இருக்கும் அதிக விளைச்சலைத் தரக் கூடிய விதை வகைகள், இலவசமாக விநியோகிக்கப்படும்.
வரவிருக்கும் காரீப் 2021 பருவத்தில் பயிரிடுவதற்காக ரூ. 82.01 கோடி மதிப்பில் 20,27,318 விதைகள் அடங்கிய சிறிய கிட்களை (2020-21 ஆம் ஆண்டை விட 10 மடங்கு அதிகம்) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பருப்பு வகைகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, 4.05 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்படுவதற்கு இந்த சிறிய கிட்களுக்கான மொத்த செலவை மத்திய அரசே ஏற்கும். இது தவிர மாநிலங்களால் மேற்கொள்ளப்படும் ஊடுபயிர் முறை மற்றும் விளைநிலங்களை விரிவுபடுத்துவது போன்ற பணிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு தொடர்ந்து நடைபெறும்.
ஜூன் 15-ஆம் தேதிக்குள் மாவட்ட அளவில் அனுமதி அளிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய/ மாநில முகமைகள் வாயிலாக இந்த கிட்கள் வழங்கப்படும். இந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக சுமார் 4 லட்சம் டன் துவரம் பருப்பு, 0.6 லட்சம் டன் பயத்தம் பருப்பு மற்றும் சுமார் 3 லட்சம் டன் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை இந்தியா தற்போது இறக்குமதி செய்து வருகிறது.
இந்த சிறப்பு திட்டத்தின் வாயிலாக இந்த மூன்று வகை பருப்புகளின் உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன், இறக்குமதியின் மீதான சுமை குறைக்கப்பட்டு, பருப்பு வகைகளின் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடைய முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716492
*****************
(Release ID: 1716529)