வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இமயமலையில் இயற்கை முறையில் விளைந்த தினையை டென்மார்க்கிற்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது

Posted On: 05 MAY 2021 6:01PM by PIB Chennai

நாட்டின் இயற்கை விவசாய பொருட்களின் ஏற்றுமதிக்கு பெரும் ஊக்கமளிக்கும் விதத்தில், இமயமலையில் பனி படர்ந்த கங்கை தண்ணீரில் விளைந்த தினையை முதல்முறையாக டென்மார்க்கிற்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

உத்தரக்காண்டில் உள்ள இந்த இடம் தேவ் பூமி என்று அழைக்கப்படுகிறது.

உத்தரக்காண்ட் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் வாரியம் மற்றும் ஜஸ்ட் ஆர்கானிக் எனும் ஏற்றுமதியாளருடன் இணைந்து, ராகி மற்றும் ஜிங்கோராவை உத்தரக்காண்டில் உள்ள விவசாயிகளிடம் இருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (அபேடா) வாங்கி ஏற்றுமதி செய்கிறது. மேற்கண்ட பொருட்கள் ஐரோப்பிய யூனியனின் தர நிலைகளை பூர்த்தி செய்கிறது.

தினையை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் உத்தரக்காண்ட் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் வாரியம், அதி நவீன பதப்படுத்துதல் ஆலையில் அதை பதப்படுத்துகிறது. மண்டி வாரியத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த ஆலை, ஜஸ்ட் ஆர்கானிக்கால் இயக்கப்படுகிறது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து கூறுகையில், “இந்தியாவில் விளைவிக்கப்படும் பிரத்தியேக வேளாண் பொருளான தினைக்கு சர்வதேச சந்தையில் நல்ல தேவை உள்ளது,. இமயமலைப் பகுதியில் விளையும் தினை மீது சிறப்பு கவனம் செலுத்தி தினை ஏற்றுமதியை நாங்கள் தொடர்வோம்,” என்றார்.

இதற்கிடையே, இந்தியாவின் இயற்கை விவசாய பொருட்களின் ஏற்றுமதி ஏப்ரல்-பிப்ரவரி (2020-21) காலகட்டத்தில் (கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது) 51% சதவீதம் அதிகரித்து ரூ 7078 கோடியாக இருந்தது.

*****************(Release ID: 1716349) Visitor Counter : 54