சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட கொவிட்-19 நிவாரண பொருட்கள் 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு : மருத்துவ கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டன.

Posted On: 04 MAY 2021 2:51PM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தை மாநிலங்களுடன் இணைந்து, மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. நாடு முழுவதும் கொவிட் தொற்று மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதற்கு முன் இல்லாத வகையில்  அதிகரித்துள்ளது. 

கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. மருத்துவ சாதனங்கள், மருந்துகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் உட்பட பல பொருட்களை பல நாடுகள் வழங்கி வருகின்றன. 

இந்தப் பொருட்கள் அனைத்தும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக பெறப்படுகிறது. இதில் இந்திய செஞ்சிலுவை சங்கமும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. 

இந்த பொருட்களை விநியோகிப்பதில் நெறிப்படுத்தப்பட்ட வழிமுறை பின்பற்றப்படுகிறது.  
கொவிட் தொடர்பான இறக்குமதிகளை, ஒரு சில மணி நேரத்தில் சரிபார்த்து அனுப்புவதற்கு சுங்கத்துறை 24 மணி நேரமும் செயல்பட்டு உடனடி அனுமதி வழங்குகிறது. 

மேலும், கொவிட் தொடர்பான இறக்குமதிகளுக்கு சுங்கவரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  நன்கொடையாக இறக்குமதி செய்யப்படும் கொவிட் தொடர்பான பொருட்களுக்கு ஐஜிஎஸ்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
தனிப்பட்ட உபயோகத்துக்கான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இறக்குமதிக்கு ஐஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து வந்த கொவிட் நிவாரண பொருட்களை தேவைப்படும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் ஒருங்கிணைந்து செயல்பட தனிப்பிரிவு ஒன்றை கூடுதல் செயலாளர் தலைமையில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கு சம அளவில் கொவிட் நிவாரணப் பொருட்களை வழங்கும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  முதல் சில நாட்களில், கொவிட் நோயாளிகள் அதிகமாக இருக்கும் எய்ம்ஸ் மற்றும் மத்திய மருத்துவமனைகள் இருக்கும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.  அதோடு தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மத்திய அரசின் மருத்துவமனைகள் மற்றும் டிஆர்டிஓ மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன. 

பின்னர் நிலையான செயல்பாட்டு நடைமுறையின் கீழ் மே 2ம் தேதி முதல் இந்த ஒதுக்கீடுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்டது. 
நிவாரணப் பொருட்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளதால், அவற்றை பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்து உகந்த முறையில் பயன்படுத்த வேண்டும். 

24 பிரிவுகளில் பெறப்பட்ட 40 லட்சம் பொருட்கள் பல மாநிலங்களில் உள்ள 86 மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. 
பிபாப் இயந்திரங்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் கருவிகள், ஆக்ஸிமீட்டர்கள், பிளாவிபரிவிர் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள், பிபிஇ உடைகள், என்-95 முகக் கவசங்கள் ஆகியவை இதில் அடங்கும். 

இந்தப் பொருட்கள் நாடு முழுவதும் 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில்  உள்ள 38 முக்கிய மருத்துவமனைகள் உட்பட 86 மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715896

••••••••••


(Release ID: 1715923) Visitor Counter : 271