ஆயுஷ்

சர்வதேச யோகா தினம் 2021: ஆயுஷ், இளைஞர் நலன் அமைச்சகங்கள் இணைந்து யோகாவுக்கு ஊக்கம்

Posted On: 04 MAY 2021 11:14AM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் 2021 வரும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அதற்கு 50 நாட்களுக்கு முன்னதாகவே மத்திய ஆயுஷ் அமைச்சகமும், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமும் இணைந்து யோகாவை தினசரி பழக்கமாக பொதுமக்கள் கடைபிடிப்பதற்கு ஊக்குவித்து வருகின்றன. இதற்கான நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன.

இம்மாதம் 2-ந் தேதி அன்று இரண்டு அமைச்சகங்களும் இணைந்து நடத்திய காணொலி நிகழ்வில், மத்திய விளையாட்டுத் துறை இணையமைச்சர் திரு.கிரண் ரிஜிஜூ, திரு.புல்லேலா கோபிசந்துடன், விளையாட்டு வீரர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து நடத்திய உரையாடல் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. பிரபல தடகள வீராங்கனை திருமதி.அஞ்சு பாபி ஜார்ஜ் யோகா குறித்து தெரிவித்த கருத்தும் இந்த நிகழ்வில் இடம் பெற்றது. ஆயுஷ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகங்களின் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை 5,000-க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.

கொவிட்-19 தொற்று அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச யோகா தினத்தை பிரபலப்படுத்த மக்கள் பங்கேற்புடன் கூடிய நேரடி நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு காணொலி வாயிலான நிகழ்ச்சிகளுக்கு இரு அமைச்சகங்களும் ஏற்பாடு செய்துள்ளன. “யோகாவுடன் இருங்கள், வீட்டில் இருங்கள்” என்ற செய்தியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரப்புரை செய்து வருகிறது. கொவிட்-19 இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள சூழலில், மக்களின் உடல்நலத்தையும், மன நலத்தையும் பராமரிக்க யோகா பெரிதும் பயன்படுகிறது. பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள மனஅழுத்தத்தையும், யோகப் பயிற்சி குறைக்கிறது. இதனை தினமும் செய்து வந்தால் உடல்நலன் மேம்படுவதுடன், இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியும் வலுப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715848

•••••
 

(Release ID: 1715848)


(Release ID: 1715873) Visitor Counter : 205