தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கொவிட் இரண்டாம் அலை நிலவரம் குறித்து பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை

Posted On: 30 APR 2021 4:05PM by PIB Chennai

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் இரண்டாம் அலை நிலவரம் குறித்துபிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு இன்று ஆலோசித்தது.

இந்த சூழலை எதிர்கொள்ள மத்திய அரசின் அனைத்து துறைகளும், ஒன்றாகவும், விரைவாகவும் செயல்படுகின்றன என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

மத்திய அமைச்சர்கள் தங்கள் தொகுதி மக்களுடன் தொடர்பில் இருந்து அவர்களுக்கு உதவ  வேண்டும் என்றும், அவர்களின் கருத்துக்களை தொடர்ந்து பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

உள்ளூர் அளவில் உள்ள பிரச்சனைகள் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கடந்த 14 மாதங்களாக மத்திய, மாநில அரசுகள், இந்திய மக்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் அமைச்சரவை குழு ஆய்வு செய்தது.

மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிப்பது, பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் வசதிகளை செய்வது, ஆக்ஸிஜன் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் மற்றும் போக்குவரத்து, அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பது தொடர்பான பிரச்னைகளை தீர்த்தல் போன்றவற்றில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட மேற்கொண்ட முயற்சிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவரிக்கப்பட்டன

இவற்றின் விநியோகத்தை மேலும் அதிகரிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டனபாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு தானியங்கள் அளிப்பது, ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிதி உதவி அளிப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது.

இரண்டு கொவிட் தடுப்பூசிகளை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியது மற்றும் பல தடுப்பூசிகள் அனுமதிக்காக பல்வேறு நிலைகளில் இருப்பது குறித்து சுட்டிக் காட்டப்பட்டது. தற்போது வரை 15 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணிவது, 6 அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் கைகளை அடிக்கடி கழுவுவது  போன்ற கொவிட் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர்கள் குழு வலியறுத்தியது.

நம் முன் உள்ள இந்த பிரம்மாண்ட பணியை நிறைவேற்ற மக்கள் பங்களிப்பு முக்கிய அம்சம் என அமைச்சர்கள் குழு வலியுறுத்தியது.

தொற்றை தோற்கடித்து நாடு மீண்டும் எழுச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்தது.

காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர்கள், பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்நிதிஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், கொவிட் -19 மேலாண்மை குறித்து விளக்கினார்.

தற்போது ஏற்பட்டுள்ள தொற்று பிரச்னை, நூறாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் பிரச்னை என்றும், இது உலகத்துக்கு மிகப் பெரிய சவாலை விடுத்துள்ளது எனவும், அமைச்சர்கள் குழு குறிப்பிட்டது.

கொவிட்டை எதிர்த்து போராட மத்திய அரசின் இந்தியக்குழுவின் அணுகுமுறை, மத்திய, மாநில அரசுகள், இந்திய மக்கள் ஆகியோரின் கூட்டு முயற்சி அடிப்படையிலான அணுகுமுறை என்று இந்த கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது

                                                                                         ------



(Release ID: 1715162) Visitor Counter : 196