பாதுகாப்பு அமைச்சகம்

பைத்தான்-5 வான்வழி தாக்குதல் ஏவுகணையின் முதல் சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நிகழ்த்தியது

Posted On: 28 APR 2021 1:18PM by PIB Chennai

இந்தியாவின் இலகு ரக போர் விமானமான தேஜாஸ், ஐந்தாம் தலைமுறை பைத்தான்-5 வான்வழி தாக்குதல் ஏவுகணையை தன்னுடைய ஆயுத திறனுடன் 2021 ஏப்ரல் 27 அன்று சேர்த்தது.

தேஜாசுடன் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள டெர்பி பியாண்ட் விஷுவல் ரேஞ்ச் (பிவிஆர்) வான்வழி ஏவுகணையின் அதிகரிக்கப்பட்ட திறனையும் மதிப்பிடுவதற்காக சோதனைகள் நடத்தப்பட்டன. மிகவும் சவாலான சூழ்நிலைகளில் ஏவுகணைகளின் திறனை சோதித்து பார்ப்பதற்காக இந்த சோதனைகள் கோவாவில் நடத்தப்பட்டன.

டெர்பி மற்றும் பைத்தான் ஏவுகணைகள் இலக்குகளை கச்சிதமாக தாக்கி தங்கள் முழுத்திறனை நிரூபித்தன. திட்டமிடப்பட்ட அனைத்து நோக்கங்களையும் சோதனைகள் அடைந்தன.

இந்த சோதனைகளுக்கு முன்னதாக, வான் பயண மின்னணுவியல், நெருப்பு-கட்டுப்பாட்டு ரேடார், ஏவுகணை ஆயுத விநியோக அமைப்பு மற்றும் விமான கட்டுப்பாட்டு அமைப்பு போன்ற தேஜாஸ் போர் விமானத்தில்  உள்ள  அமைப்புகளுடன் ஏவுகணையின் ஒருங்கிணைப்பை மதிப்பிடுவதற்காக விரிவான சோதனைகள் பெங்களூருவில் நடத்தப்பட்டன.

கோவாவில் வெற்றிகரமாக நடைபெற்ற பிரிப்பு சோதனைகளுக்கு பிறகு, ஏவுகணையின் நேரடி ஏவுதல் சோதனைஇலக்கு ஒன்றின் மீது நடைபெற்றது. அனைத்து கூறுகளையும் ஆய்வு செய்வதற்காக நடைபெற்ற இந்த சோதனைகளில், இலக்கை சரியாக ஏவுகணை தாக்கியது.

தேசிய விமான சோதனை மையத்தை சேர்ந்த இந்திய விமானப்படை சோதனை விமானிகள் வான்வழி மேம்பாட்டு முகமையின் தேஜாஸ் போர்  விமானத்தில் இருந்து இந்த ஏவுகணைகளை சோதனை செய்து பார்த்தனர். வான்வழி மேம்பாட்டு முகமை, இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்-ஏஆர்டிசி ஆகியவற்றின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள், செமிலாக், தலைமை இயக்குநர்-விமான தர உறுதி அமைப்பு, இந்திய விமானப்படை திட்ட மேலாண்மை குழு, என்பிஓ (இலகுர போர் விமானம் கப்பல் படை) மற்றும் இந்திய கப்பல் படை ஹன்சா ஆகியோரின் பாராட்டத்தக்க ஆதரவுடன் இந்த வெற்றிகரமான சோதனையை செய்து முடித்தனர்.

டிஆர்டிஓ, வான்வழி மேம்பாட்டு முகமை, இந்திய விமானப்படை மற்றும் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்டின் குழுக்கள் மற்றும் சோதனையில் ஈடுபட்ட அனைவரையும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

பல்வேறு அமைப்புகள் மற்றும் தொழில் துறையின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் முயற்சிகளை டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி பாராட்டினார்.

*****************(Release ID: 1714678) Visitor Counter : 13