பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியா மற்றும் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான இணைய கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

Posted On: 20 APR 2021 4:59PM by PIB Chennai

இந்தியா மற்றும் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான இணைய கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி 2021 ஏப்ரல் 20 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 'இந்தியா-வியட்நாம் ராணுவ ஒத்துழைப்பு' என்பது இந்த இணைய கருத்தரங்கின் மையக்கருவாகும். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், பாரத் ஃபோர்ஜ், எக்கனாமிக் எக்ஸ்புளோசிவ்ஸ் லிமிடெட், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ், கோவா ஷிப்யார்ட்ஸ் லிமிடெட், எச் பி எல் பவர் சிஸ்டம்ஸ், லார்சன் & டூப்ரோ லிமிடெட், மகிந்திரா டிஃபன்ஸ், எம் கே யு, எஸ் எம் பி பி, டாடா அட்வன்ஸ்ட் சிஸ்டம்ஸ் போன்ற பல்வேறு இந்திய நிறுவனங்கள் இந்நிகழ்வில் பங்கேற்று, நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் குறித்த விளக்க காட்சிகளை வழங்கின. கண்காட்சியில் 37 நிறுவனங்கள் மெய்நிகர் அரங்கங்களை அமைத்திருந்தன.

இந்திய தூதரகத்தின் தூதர், ஹனோய் ஶ்ரீ பிரனாய் வர்மா, ராணுவ தொழில்களின் பொதுத் துறை தலைவர், தேசிய பாதுகாப்பு அமைச்சகம், வியட்நாம் லெப்டினன்ட் ஜெனரல் டிரான் ஹாங் மின் மற்றும் இரு தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள் இணைய கருத்தரங்கில் பங்கேற்றனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய இணை செயலாளர், (ராணுவ தொழில்கள் உற்பத்தி), பாதுகாப்பு அமைச்சகம் திரு அனுராக் பாஜ்பாய், தற்சார்பு இந்தியா லட்சியம் என்பது உள்நோக்கி பார்ப்பது மட்டுமே அல்ல என்றும், விலை குறைந்த பொருட்களை தரமான முறையில் உற்பத்தி செய்து ஒட்டுமொத்த உலகத்திற்கு, குறிப்பாக நட்பு நாடுகளுக்கு, வழங்குவதும் தான் என்றும் கூறினார். இந்திய கப்பல் கட்டும் தொழில் பல ஆண்டுகளாக நீடித்து நிலைத்திருப்பதாகவும், இத்துறையில் சிறப்பான நிபுணத்துவத்தை பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். கப்பல் கட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் தளங்களின் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் வியட்நாம் கப்பல் தளங்களுடன் இந்திய கப்பல் தளங்கள் பணியாற்ற தயாராக உள்ளன.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு மூலமாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ உற்பத்தி துறையால் இந்த இணைய கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கும், அடுத்த ஐந்து வருடங்களில் ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதிகளுக்கான இலக்கான 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டுவதற்கும் நட்பு நாடுகளுடன் நடைபெற்று வரும் இணைய கருத்தரங்குகளின் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

*****************



(Release ID: 1713006) Visitor Counter : 132