பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 தடுப்பு பொது சுகாதார நடவடிக்கைகளின் தயார்நிலை குறித்து பிரதமர் ஆய்வு


பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்கு மாற்று எதுவும் இல்லை: பிரதமர்

கொவிட் நோயாளிகளுக்கு மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்

உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்திறனுடனும், மக்களின் கவலைகளுக்கு உணர்வு பூர்வமாக அக்கறை செலுத்த வேண்டும்: பிரதமர்

ரெம்டெசிவிர் மற்றும் இதர மருந்துகளின் விநியோக நிலவரம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்

மருத்துவ ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட வேண்டும்: பிரதமர்

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க, ஒட்டுமொத்த நாட்டின் திறனையும் பயன்படுத்த வேண்டும் : பிரதமர்

Posted On: 17 APR 2021 9:40PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றை சமாளிக்கும் தயார் நிலை குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.  மருந்துகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

அனைவருடனும் இணைந்து, இந்தியா கடந்தாண்டு கொவிட் தொற்றை முறியடித்தது.  அதே விதிமுறைகளுடன், ஆனால் மேலும் வேகம் மற்றும் ஒருங்கிணைப்புடன்  இந்தியாவால் கொரோனாவை  மீண்டும் தோற்கடிக்க முடியும் என பிரதமர் கூறினார்.

கொவிட் பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்கு மாற்று எதுவும் இல்லை என பிரதமர் வலியுறுத்தினார்.  உயிரிழப்பை குறைக்கஆரம்ப பரிசோதனை மற்றும் முறையான கண்காணிப்பு அவசியம்.  உள்ளூர் நிர்வாகம் செயல் திறனுடன் இருக்க வேண்டும் மற்றும் மக்களின் கவலைகளுக்கு உணர்வுபூர்வமாக அக்கறை செலுத்த வேண்டும் என அவர் கூறினார்.

தொற்றை கையாள்வதில், மாநிலங்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டார்.  கொவிட் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறினார்.

தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமை மையங்கள் மூலம் கூடுதல் படுக்கைகள் விநியோகத்தை உறுதி செய்ய பிரதமர் உத்தரவிட்டார்.

பல மருந்துகளின் தேவைகளை பூர்த்தி செய்ய, இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் முழு ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள  வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.

ரெம்டெசிவிர் மற்றும் இதர மருந்துகளின் விநியோக நிலவரம் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.  ரெம்டெசிவிர் மருந்து அனைவருக்கும் கிடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது.

அரசின் முயற்சிகள் மூலம், ரெம்டெசிவர் உற்பத்தியை மே மாதத்தில் 74.10 லட்சம் குப்பிகளாக அதிகரிக்க முடியும்.  மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விநியோக சங்கிலியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவும் அவர் உத்தரவிட்டார்.  ரெம்டெசிவிர் மற்றும் இதர மருந்துகளை  அனுமதிக்கப்பட்ட மருந்துவ வழிகாட்டுதல்களுடன் பயன்படுத்தவும் பிரதமர் உத்தரவிட்டார்.

அனுமதிக்கப்பட்ட மருத்துவ ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கும் பணியை விரைவு படுத்தவும் பிரதமர் உத்தரவிட்டார்.   32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 162 ஆக்ஸிஜன் ஆலைகள், பிரதமரின் நல நிதியை பயன்படுத்தி அமைக்கப்படுகின்றன. 

1 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும் அவைகள் விரைவில் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  அதிகம் பாதிப்புள்ள 12 மாநிலங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால ஆக்ஸிஜன் தேவைகளுக்கான மதிப்பீடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் அதிகாரிகள் கூறினர்.

வென்டிலேட்டர்கள் கிடைக்கும் நிலவரம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.  இதற்காக கண்காணிப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இந்த முறையை செயல்திறனுடன் பயன்படுத்தி கொள்ள  சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என  உத்தரவிட்டார்.

கொவிட் தடுப்பூசி போடுவதில், ஒட்டு மொத்த நாட்டின் திறனையும் பயன்படுத்தி கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் பிரதமருடன், அமைச்சரவை செயலாளர், முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர்கள், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மருந்தக செயலாளர் மற்றும் நிதி ஆயோக்கை சேர்ந்த மருத்துவர் வி.கே.பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712484

*****************



(Release ID: 1712540) Visitor Counter : 208