குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தொழில்முனைவு மற்றும் புதுமைகளின் உணர்ச்சியை இளைஞர்கள் ஏற்படுத்திக் கொள்ளுமாறு குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 03 APR 2021 11:59AM by PIB Chennai

இந்தியாவின் ஒளிமயமான  கடந்த காலத்திலிருந்து உத்வேகம் கொண்டு தொழில்முனைவு மற்றும் புதுமைகளின் உணர்ச்சியை இளைஞர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்

 21-ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற வகையிலான திறன்களை மாணவர்களுக்கு வழங்குமாறு பல்கலைக்கழகங்களையும், கல்வி நிறுவனங்களையும் கேட்டுக்கொண்ட அவர், இதன்மூலம் மாணவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் வளர்வார்கள் என்று கூறினார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள  உத்கல் பல்கலைக்கழகத்தின் 50-ஆவது பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், சர்வதேச கல்வி பற்றிய இந்தியாவின் வளமான பாரம்பரியம் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவூட்டினார்.

தக்சசீலா, நாலந்தா, வல்லபி, விக்ரமசீலா  போன்ற பழமை வாய்ந்த இந்திய நிறுவனங்களை எடுத்துக்காட்டிய அவர், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் நாட்டை மாற்றியமைக்கும் வகையில் முழுமையான மற்றும் புதுமையான தனிநபர்களை உருவாக்குவதற்கு இதுபோன்ற தலைசிறந்த இந்திய பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஒடிசாவில் சுமார் 62 வெவ்வேறு பழங்குடி சமூகத்தினர் (மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதம்) வசிப்பதாகக் குறிப்பிட்ட திரு வெங்கையா நாயுடுஅவர்களது வளர்ச்சி மற்றும் நல்வாழ்விற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், உரிய மரியாதை மற்றும் உணர்வு திறனுடன் அவர்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தங்களது தனித்துவம் வாய்ந்த பழக்கங்கள், பாரம்பரியம், இயற்கை உணவு முறைகள் போன்றவற்றினால் கொவிட்-19 பெருந்தொற்றால் இந்த மாநிலத்தின் பழங்குடி மக்கள் பெரிதும் பாதிக்கப்படவில்லை என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். இதுபோன்ற நேர்மறை அம்சங்கள் பள்ளிப் பாடப் பகுதிகளில் இடம்பெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மாநிலத்தில் பொதுவாக ஏற்படும் புயல், வெள்ளம் வறட்சி போன்ற  இயற்கை பேரிடர்கள் குறித்து பேசிய அவர், துவக்கக் காலம் முதலே பேரிடர் மேலாண்மை என்பது கல்வியுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் எதிர்கால பேரிடர்களை எதிர்கொள்வதில் நாம் தயாராக இருக்க முடியும் என்றும்  குறிப்பிட்டார்.

மாணவர்களின் எதிர்காலம் நாட்டின் எதிர்காலத்துடன் இணைந்திருப்பதால் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்கு அவர்கள் ஒழுக்கம், நேர்மை, கடின உழைப்பு போன்ற குணங்களை பின்பற்ற வேண்டும் என்றும், பாலின வேறுபாடு, சாதி, வகுப்புவாதம், ஊழல் போன்ற சமூக அவலங்களுக்கு எதிராக இளைஞர்கள் போராட வேண்டும் என்று திரு வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் ஒடிசா மாநில ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் கணேஷி லால், மாநில அமைச்சர் டாக்டர் அருண் குமார் சாஹூ, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சபிதா ஆச்சார்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1709300

*****************



(Release ID: 1709320) Visitor Counter : 179