குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தொழில்முனைவு திறனுள்ள இளைஞர்கள் கிராமங்களுக்கு திரும்பி விவசாயம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்
Posted On:
31 MAR 2021 5:18PM by PIB Chennai
இந்திய விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவதற்கும், விவசாயத்தை லாபகரமானதாக ஆக்குவதற்கும் வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார்.
இதை அடைவதற்கு கூட்டு நடவடிக்கை தேவை என்றும் வேளாண் சமூகத்திற்கு நல்ல பலன்களை அளிக்கும் அமைப்பை வடிவமைக்க விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளுடன் பேச்சுவார்த்தை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
'இந்தியாவில் விவசாயம்: விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதில் தற்போதைய சவால்கள்' எனும் தலைப்பில் ஆந்திரப் பிரதேச முன்னாள் தலைமைச் செயலாளர் டாக்டர் மோகன் கண்டா எழுதிய புத்தகத்தை வெளியிட்டு பேசிய குடியரசு துணைத் தலைவர், இந்திய விவசாயிகள் தங்களது முழு திறனை அடைவதில் உள்ள சிக்கல்களை அடையாளம் காண வேண்டும் என்று கூறினார்.
விவசாயத்தை லாபகரமானதாகவும் நீடித்து நிலைக்கக் கூடியதாகவும் ஆக்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்றும் இதற்கு முதன்மையான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் திரு நாயுடு தெரிவித்தார்.
கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் விவசாயத்தை நோக்கி நேர்மறையான நிலையை கொண்டிருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வரலாறு காணாத அளவுக்கு உணவு தானியம் மற்றும் தோட்டப் பயிர்களை உற்பத்தி செய்ததற்காக விவசாயிகளை அவர் பாராட்டினார்.
தொழில்முனைவு திறனுள்ள இளைஞர்கள் கிராமங்களுக்கு திரும்பி விவசாயம் செய்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், இதை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.
நமது மக்கள்தொகை வலிமையை லாபகரமாக பயன்படுத்துவதற்கு வேளாண் தொழில் முனைதல் சிறப்பான வழி என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.
சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு இந்தியா என்ற மனப்பான்மையுடன் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றம், அரசியல் தலைவர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் ஆகிய நான்கு பிரிவுகளும் வேளாண்மை குறித்த நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்று திரு நாயுடு கேட்டுக் கொண்டார்.
விவசாயத்தை லாபகரமான தொழிலாக்குவதற்கு நீண்டகால கொள்கை மாற்றங்கள் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708728
----
(Release ID: 1708760)
Visitor Counter : 230