குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பொதுவாழ்வில் மாண்புகளை கடைப்பிடிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 27 MAR 2021 1:52PM by PIB Chennai

பொதுவாழ்வில் மாண்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, விவாதங்களின் தரத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகளுக்கு  தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான திரு நூகலா நரோத்தம் ரெட்டியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் பேசிய அவர், அண்மைக் காலங்களில் ஒரு சில மாநில சட்டமன்றங்களில் நிகழும் சம்பவங்கள் மிகவும் வேதனையளிப்பதாகத் தெரிவித்தார்.

இடையூறு என்பது விவாதங்களிலிருந்து வழி தவறுவதையும், ஜனநாயகம் மற்றும் தேசத்தின் பாதைகளிலிருந்து விலகுவதையும் குறிக்கிறது”, என்று அவர் எச்சரித்தார்.

சட்டமன்றங்களில் உறுப்பினர்களின் செயல், மக்களின் லட்சியங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டுமென்று கூறிய திரு நாயுடு, சட்டமன்றத்தின் நேரத்தை மேலும் ஆக்கப்பூர்வமாகவும், பயனுள்ளதாகவும் அவர்கள் உபயோகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நல்ல பண்புகள்நாட்டுப்பற்று, பொதுவாழ்வில் நாணயம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர், “அனைத்து வகைகளிலும் முழுமையான தனிநபர்களைகல்வி உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இளம் தலைமுறையினரின் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி களுடன் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.

தாய்மொழியின் முக்கியத்துவம் பற்றி பேசிய திரு வெங்கையா நாயுடு, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியுடனான தொடர்பை மேம்படுத்தும் வகையில், அவர்கள் தங்களது தாய்மொழியில் உரையாடுவது அவசியம் என்றார் அவர்.

நம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நாம் என்ன பேசுகிறோம் என்பது தெரிய வேண்டும். அதற்காகவே கூடுமானவரை உறுப்பினர்கள் தங்களது தாய் மொழியில் பேச முயல வேண்டும்”, என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா உள்துறை அமைச்சர் திரு முகமது மொகமூத் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708027

-------



(Release ID: 1708043) Visitor Counter : 159