குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதிலும், சர்வதேச ஆளுகை கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவதிலும் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 15 MAR 2021 6:43PM by PIB Chennai

பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதிலும், சர்வதேச ஆளுகை கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவதிலும் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார்.

குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றங்களுக்கான சங்கத்தின் தலைவர் திரு டுவார்ட் பச்சேக்கோவுடனான சந்திப்பின் போது பேசிய அவர், ஜனநாயகம் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி முறை மீது இந்தியா கொண்டுள்ள உறுதியை வலியுறுத்தினார்.

உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்துகளை இந்தியா வழங்கியதில் இது பிரதிபலித்ததாக அவர் தெரிவித்தார்.

154-க்கும் அதிகமான நாடுகளுக்கு கொவிட் தடுப்பூசிகளை இந்தியா அளித்ததாகவும், பல்வேறு நாடுகளுக்கு துரித நடவடிக்கை குழுக்களை அனுப்பியதாகவும் கூறிய திரு நாயுடு, இது போன்ற நெருக்கடிகளின் போது பொறுப்பு மிக்க நாடாக இந்தியா எப்போதுமே செயலாற்றி வந்துள்ளது, அதிக உயிர்களை காப்பது தான் எங்கள் லட்சியம் என்று கூறினார்.

1949-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றங்களுக்கான சங்கத்துடன் இந்தியா நெருங்கி பணியாற்றி வருவதாக தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், ஜனநாயக ஆட்சி முறையை ஊக்குவிக்கும் விஷயங்களில் சங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உலக அமைதியை ஊக்குவிப்பதில் இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இதற்கான நாட்டின் பங்களிப்பு குறித்தும்  பேசினார்.

மாநிலங்களவையின் தலைமை செயலாளர் திரு தேஷ் தீபக் வெர்மா, குடியரசு துணைத் தலைவரின் செயலாளர் டாக்டர் ஐ வி சுப்பா ராவ் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த உரையாடலில் கலந்துக் கொண்டனர்.

*****************(Release ID: 1704949) Visitor Counter : 19