குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஏழ்மை, ஊழல் மற்றும் இதர சமூக சீர்கேடுகளை ஒழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளுக்கு குடியரசு துணைத் தலைவர் அறைகூவல்

Posted On: 12 MAR 2021 12:38PM by PIB Chennai

ஏழ்மை, ஊழல், கல்லாமை மற்றும் பாலின பாகுபாடு உள்ளிட்ட சமூக சீர்கேடுகளை ஒழிப்பதற்கும், பொருளாதார வலிமை கொண்ட இந்தியாவை கட்டமைப்பதற்கும் உறுதியான நடவடிக்கைகள் தேவை என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறினார்.

நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கான உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆக இருப்பதை கொண்டாடும் விதமாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்த 75-வார  கொண்டாட்டமான சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவத்தை ஒட்டி தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு நாயுடு இவ்வாறு கூறியுள்ளார்.

அடக்குமுறைகளுக்கு இந்தியா அஞ்சாது என்பதை தண்டி யாத்திரை உலகுக்கு எடுத்துரைத்தது என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். அரசியலமைப்பு சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை நாம் அடையும் போதுதான் சுதந்திரத்தை முழுமையாக உணர முடியும் என்று அவர் கூறினார்.

மக்களை பிரித்தாளும் சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும் என்று கூறிய திரு நாயுடு, இந்தியர்கள் என்ற உணர்வு நம் அனைவரையும் ஒன்றிணைப்பதாக கூறினார்.

வளர்ச்சி மற்றும் மக்களின் நலம் ஆகியவை நமது அரசியல் அமைப்பின் மதிப்பீடுகளில் பொறிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு மேலும் திறன்களை அளித்து 4-வது தொழில் புரட்சிக்கு அவர்களை தயார்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு கொண்டாட்டம் குறித்து தமது கருத்தை தெரிவித்த அவர், நமது தேசிய பயணத்தில் இது மிகவும் முக்கியமான தருணம் என்றும் மகாத்மா காந்தி மற்றும் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் நமக்கு அளித்துச் சென்ற பாரம்பரியத்தை நினைவு கூறுவதற்கான வாய்ப்பு என்றும் கூறினார்.

சுதந்திர போராட்ட வீரர்களின் அசாதாரண விடுதலை உணர்வு, அவர்களது தலைசிறந்த தியாகங்கள் மற்றும் உயர்ந்த லட்சியங்களை நினைவு கூறுவதும், கொண்டாடுவதும் நமது முக்கிய கடமை என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1704307

------

 (Release ID: 1704405) Visitor Counter : 241