குடியரசுத் தலைவர் செயலகம்

திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரை

Posted On: 10 MAR 2021 12:04PM by PIB Chennai

வணக்கம்!

 

1.       திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் பதினாறாவது  வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் உங்கள் அனைவருடன்  இருப்பதில்  பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் போன்ற இளம் அறிஞர்களைச் சந்திப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாகும். இன்று பட்டங்கள் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

2.       மனிதகுலம் முழுமைக்கும் நலம் பயக்கும் அமரத்துவம் வாய்ந்த அறக்கருத்துகளை வழங்கி, துறவு வாழ்க்கை மேற்கொண்ட பெரும் புலவர்களில் ஒருவரது பெயரைத் தாங்கியுள்ளது இந்தப் பல்கலைக்கழகம். திருவள்ளுவரின் நினைவுக்கு நாம் தலை வணங்குவோம். அவரது உன்னதமான அறவுரைகளை உள்வாங்கிக் கொள்ள நாம் உறுதி எடுத்துக் கொள்வோமாக. அவரது குறட்பாக்கள் உங்களது கல்வி மற்றும் வாழ்க்கையில் ஒன்றிணைந்த பகுதியாகும்.

3. வலிமையான கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து விடுக்கப்பட்ட சவால்களில் ஒன்றைக் கண்ட மண்ணில் நிற்பதை நான் பெருமையாக உணர்கிறேன். 1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சி, நமது விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதினாறாவது பட்டமளிப்பு விழாவில், தலைமை விருந்தினராக பங்கேற்பதை எனக்கு கிடைத்த கவுரமாகக் கருதுகிறேன்.

4. ஒவ்வொரு முறையும் நான் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம், இங்கு கடைப்பிடிக்கப்படும் பெரும் பாரம்பரியத்துடன் எனக்கு தொடர்பு உள்ளதைப் போல உணருகிறேன். வேளாண்மையில் உரத்தைப் போல, முற்கால பொறியியல் அற்புதங்களில் ஒன்றான கல்லணையைக் கொண்ட தமிழகம் இலக்கியத்தில் தனித்துவம் பெற்றுள்ளது. உலகின் சிறந்த பாசன முறைக்கு உதாரணமாக பழமையான அணைகளில் ஒன்றாக கல்லணை திகழ்கிறது. தஞ்சையில், காவிரி ஆற்றின் குறுக்கே சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட அந்த அணை, நமது பண்டைக்கால சமுதாயத்தினரின் பொறியியல் திறமைக்கு சான்றாகத் திகழ்கிறது. அறிவும், அறிவியல் உணர்வும், இந்தப் பிராந்திய மக்களின் உள்ளார்ந்த பண்பாகத் தோன்றுகிறது. இந்தப் பகுதியில் இருந்து வந்தவர்களான பெரும் கணித மேதை எஸ். ராமானுஜன், நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர் போன்றோர் இக்காரணத்தால்தான் பெரும் புகழ் பெற்றனர். இப்பகுதியைச் சேர்ந்த  புகழ் பெற்றவர்களின் பட்டியல் முடிவில்லாமல் நீளக்கூடியதாகும்.

5. இந்தியாவின் ஒரே கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி, எனக்கு முன்னாள் பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன், டாக்டர் .பி.ஜே. அப்துல் கலாம் ஆகிய இரண்டு குடியரசு தலைவர்கள் ஆகியோர் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று கூறுவது பெருமைக்குரியதாகும்.

6. அன்பார்ந்த மாணவர்களே, “கண்ணுடையர் என்பவர் கற்றோர்என்ற திருவள்ளுவரின் அறிவார்ந்த வார்த்தைகள் உங்களது லட்சியமாகத் திகழ்கின்றன. ‘’அறிவுடையோர் மட்டுமே முகத்தில் இரண்டு கண்களைக் கொண்டுள்ளனர், மற்றவர்களுக்கு அவை இரண்டு புண்களே’’, என்பது அதன் பொருளாகும்.

7. நிறுவப்பட்ட 20 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், உங்களது பல்கலைக்கழகம், நாட்டின் பெருமைமிகு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளதுஉங்களில் பலர் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அத்தகைய மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும், முன்மையான கல்வி நிறுவனமாக இது மலர்ந்துள்ளது. இதில், சமுதாயத்தில் சவால்களைச் சந்தித்து வரும் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களும் அடக்கம்

8. இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களில் 65 சதவீதம் பேர் பெண்கள் என்பதை அறிந்து நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். நமது புதல்விகளும், சகோதரிகளும், அனைத்து துறைகளிலும் தடைகளைத் தகர்த்து வருகின்றனர். இன்று, சிறந்த கல்வித் திறனுக்கான தங்கப் பதக்கம் பெற்ற 66 மாணவர்களில், 55 பேர் பெண் மாணாக்கர்கள் என்பது இதற்கு தெளிவான சான்றாகும். இதேபோல, ஆராய்ச்சி பட்டம் பெற்ற 217 பேரில் 100 பேர் பெண்கள் என்பது பெருமைக்குரியதாகும். பதக்கங்களையும், பட்டங்களையும் பெறுவதற்கு மேடைக்கு வந்த 10 மாணவர்களில், ஒன்பது பேர் பெண்கள், அதாவது 90 சதவீதத்தினர் பெண்கள் என்பதை நான் கவனித்து அறிந்து கொண்டேன். இது இந்தியாவின் பிரகாசமான வருங்காலத்தைப் பிரதிபலிக்கிறது. நமது நாட்டின் பெண்கள் கல்வி பெறுகின்ற போது, அவர்களது வருங்காலம் மட்டுமல்லாமல் நாட்டின் வருங்காலமும் பாதுகாக்கப்படுகிறது. துணைவேந்தர் டாக்டர் தாமரைச்செல்வி சோமசுந்தரம் வழிகாட்டுதலில், இந்தப் பல்கலைக்கழகம் பெரும் உயரங்களைத் தொடும் என்பது நிச்சயம்.

9. இந்தியாவின் உயர்கல்வி முறை, கிராமப்பகுதியிலும், ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கும் தொண்டாற்றும் அளவுக்கு விரிவடைந்துள்ளது பெரும் மனநிறைவு அளிக்கும்  விஷயமாகும். இந்த நடைமுறையில், உலகின் மூன்றாவது பெரிய கல்வி முறையாக இது மாறியுள்ளது. இருப்பினும், இதில் மெத்தனத்துக்கு இடமில்லை. உயரிய இடங்களைத் தொடுவதற்கு, நாம் இழந்த காலத்தை நாம் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்.

10. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே, இந்தியாவில் செழுமையான கல்வி முறை இருந்தது. இதை காந்தியடிகள் ``அழகிய மரம்’’ என்று குறிப்பிட்டார். அதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சீர்திருத்தம் என்ற பெயரால் வெட்டித் தள்ளினர். அந்தக் கடுமையான மாற்றங்களால் ஏற்பட்ட நிலையிலிருந்து முழுமையாக விடுபட்டு, நாம் இன்னும் நமது பாரம்பரியத்தை மீட்கவில்லை.

பெரியோர்களே, தாய்மார்களே,

11. தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தத் திசையில் பயணிக்க நன்கு  திட்டமிடப்பட்டு, எடுக்கப்பட்ட உறுதியான முடிவாகும். சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், குழந்தைகளும், இளைஞர்களும் தங்களது தனி வளர்ச்சியின் ஒரு பகுதியாக கல்வியைக் கற்றுக்கொள்ளும் வகையில், மாற்றத்துக்கான முழுமையான நோக்கை இது கொண்டுள்ளது. முடிவில், இது நமது பழமையான பாரம்பரியம், நவீன கற்றல் ஆகியவற்றில் சிறந்தவற்றை, ஒருங்கிணைத்து கொண்டுவரும். தார்மீக கல்வி, இந்தியக் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை இது வலியுறுத்துவதாக அமையும். இந்தக் கல்வி முறையிலிருந்து வெளி வரும் மாணவர், அதிக தன்னம்பிக்கையுடனும், எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தகுதியை உடையவராகவும்  இருப்பர்.

12. மேலும், முன்னேற்றமான, தன்னிறைவு கொண்ட, நாட்டுக்கு மிகவும் அவசியமானவற்றை, புதிய கொள்கை கருத்தில் கொண்டுள்ளது. இதற்கு, உயர் கல்வி முறை, சமத்துவமான, நிபுணத்துவம் வாய்ந்த, அதிகாரமளித்தலை வழங்குவதாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை இந்த நோக்கங்களை அடைவதற்கு முயற்சிக்கிறது. சர். சி.வி.ராமன் குறிப்பிட்டதைப் போல, உயர் கல்வி நிறுவனங்கள், அறிவு விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி நாட்டுக்கு வழிகாட்ட வேண்டும். இதுதான், புதிய கொள்கையின் மதிப்புமிக்க உந்துதலாகும்.

அன்பார்ந்த மாணவர்களே,

13. உங்கள் வாழ்க்கையில் இன்று பெருமைமிகு தருணமாகும். கடினமாக உழைத்து நீங்கள் உங்கள் பட்டங்களைப் பெற்றுள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும், உங்களது இந்தப் பயணத்தை அடைவதற்கு உதவிய உங்கள் பெற்றோர்ஆசிரியர்கள் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள். உண்மையில், இது சமுதாயத்தில் உங்களது வாழ்க்கையின் புனிதமான ஆரம்பமாகும். இனி, உங்களது சொந்த வாய்ப்புகள், முயற்சிகள், அறிவாற்றல் ஆகியவற்றின் வலிமையால், உங்களது வாழ்க்கையின் வெற்றிப் படிக்கட்டில் நீங்கள்தான் முன்னேற வேண்டும். உங்களது கல்வி உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை திறந்து விடும். உங்களில் பலர் உயர் கல்வியை மேற்கொள்ளக்கூடும். கற்றல் என்பது உண்மையில் வாழ்க்கை முழுவதும் நீளக்கூடியதாகும். நாம் அதிகம் கற்றால், நமது அறியாமை அதிகமாக விலகுவதை நாம் உணரலாம். இதைகற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” என்ற தமிழ் பொன்மொழி அழகாக உணர்த்தும். நாம் கற்றது நம் கையில் உள்ள மண் அளவு, நாம் கற்க வேண்டியது உலகு அளவுக்கு விரிந்துள்ளது என்பது இதன் பொருளாகும்.

14. கல்வித் தகுதிகள் மட்டுமே உங்களை நல்ல மகனாகவோ, மகளாகவோ, அல்லது நல்ல அண்டை வீட்டாராகவோ மாற்றாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்களது நற்செயல்கள் சமுதாயத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். நாம் புத்தகங்களில் இருந்து எதைக் கற்றோம் என்பதை விட, வாழ்க்கையில் நாம் எதைக் கற்கிறோம் என்பதுதான் அறிவு; இவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

15. நீங்கள் வாழ்க்கையை மேற்கொள்வதற்காக  தேர்வு செய்யும் வாய்ப்புகள், உங்களது திறமைகள் மற்றும் மதிநுட்பத்தால் வழிகாட்டப்பட வேண்டும். நமது தாய்நாட்டை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். உங்களுக்கு கல்வி வழங்கிய நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல், நமது தாய்நாட்டுக்கும் நன்றி செலுத்தும் அடையாளமாக, நமது நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் பங்களிக்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் கடமையுணர்வு கொண்ட குடிமக்களாக நீங்கள் திகழ்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

16. உலக அரங்கில் இந்தியாவை ஒளிரச் செய்வதில், நம் அனைவருக்கும் பெரும் பங்கும், பொறுப்பும் உள்ளது. மிகவும் முக்கியமாக, நமக்கு அதைச் செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. அமைதியான முறையில் ஒன்று சேர்ந்து எவ்வாறு வாழ்வது, எவ்வாறு இயற்கையை பேணிக்காப்பது என்பதை உலகுக்கு பாடம் கற்பிக்கும் தனித்துவமான இடத்தில் நமது நாடு உள்ளது. அதிக பொருளாதார வளர்ச்சி, அதிக முன்னேற்றம் ஆகியவற்றை இந்தியா அடைந்துள்ளதால், நம்மிடமிருந்து அதிகமாக கற்றுக்கொள்ளும் ஆவலுடன் உலகம் நம்மை நோக்கி திரும்பியுள்ளது. இந்தியாவின் சகாப்தத்தில் புதிய அத்தியாயத்தை எழுதும் திறமை உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளது. அதற்கு சரியான லட்சிய வேட்கை அவசியமாகும். இந்த விஷயத்தில் நீங்கள் குழப்பமடைவதை உணரும் போது, காந்தியடிகளின் அறிவுரை உங்களுக்கு பிரகாசமான வழியைக் காட்டும். ‘’ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், ஒவ்வொரு நிமிடத்தையும் செலவழிப்பதில் அடங்கியுள்ள கொள்கை குறித்தான கவனம்தான், குடியுரிமைக்கான சிறந்த படிப்பினையாகும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

தாய்மார்களே, பெரியோரே,

17. இந்த நிகழ்ச்சியில், இங்கு பங்கேற்கும் மாணவர்களின் குடும்பத்தினருக்கும் எனது பாராட்டுதல்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இளைஞர்கள் தங்களது துறைகளில் சிறப்பான இடம் பிடிக்க, அவர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்ததுடன், முக்கிய பங்களிப்பை வழங்கிய பல்கலைக்கழகத்தின் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

18. நீங்கள் பிரகாசமான எதிர்காலத்தை அடைய வாழ்த்துகிறேன். உங்களது வருங்கால முயற்சிகள் அனைத்திலும் எனது வாழ்த்துகள் உங்களுடன் இருக்கும்.

நன்றி!

ஜெய் ஹிந்த்!

 

                                                      ***(Release ID: 1703708) Visitor Counter : 162