குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னணி நாடாக மாற, மீள்திறன், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு ஆகியவை உதவியது : குடியரசு துணைத் தலைவர்
Posted On:
07 MAR 2021 1:16PM by PIB Chennai
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னணி நாடாக மாற, மீள்திறன், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு ஆகியவை உதவியது என குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறினார்.
பரிதாபாத் இஎஸ்ஐசி மருத்துவ கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா, தில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறியதாவது:
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னணி நாடாக மாற, மீள்திறன், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு ஆகியவை உதவியது. கொவிட் சவால்களுக்கு தொழில்நுட்ப தீர்வுகள் கண்டுபிடித்ததில் நமது ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அயராத முயற்சி மற்றும் அறிவாற்றல் பாராட்டத்தக்கது.
கொவிட் பரவலை கட்டுப்படுத்தியதில் நமது மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை உருவாக்குபவர்கள் சரியான நேரத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்தனர். பிபிஇ உடைகள், கையுறைகள், முகக் கவசங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்ததில் இந்திய தொழில் நிறுவனங்களின் பங்கு பாராட்டத்தக்கது.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இஎஸ்ஐசி மருத்துவ ஊழியர்களின் பங்கு பாராட்டத்தக்கது.
இந்தப் பட்டமளிப்பு விழா, மாணவர்களின் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.
நீங்கள் சேவை மனப்பான்மையுடன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும். தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் நீங்கள் மனிதகுலத்துக்கு சேவையாற்றினால், உங்களுக்கு அளவற்ற திருப்தி ஏற்படும்.
மருத்துவ தொழில், மிக உயர்ந்த உன்னதமான தொழில். இதில் கருணை, நெறிமுறைகள் மற்றுமா அதன் மதிப்புகளை பின்பற்ற வேண்டும். இவற்றில் சமரசம் கூடாது.
பதக்கம் பெற்ற அனைவரும் மாணவிகளாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுக்கு வாழ்த்துக்கள். அனைத்து துறையிலும் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
உலகின் மிகப் பெரிய கொவிட்-19 தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது. தொற்றின் மோசமான நிலை முடிவடைவது போல் தெரிகிறது. ஆனாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, தொற்றை முழுமையாக தோற்கடிக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தொற்று அற்ற நோய்களும், இந்தியாவில் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதில் 65 சதவீதம் மரணம் ஏற்படுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதம் பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தை இஎஸ்ஐசி செயல்படுத்துவது பாராட்டத்தக்கது.
நவீன மருத்துவ வசதிகள், திறமையான மருத்துவர்கள் நாட்டில் உள்ளதால், இந்தியா சிறந்த மருத்துவ சுற்றுலாத் தலமாக உருவாகிவருவது திருப்தி அளிக்கிறது.
இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறினார்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு சந்தோஷ் குமார் கங்வர், செயலாளர் திரு அபூர்வா சந்திரா, இஎஸ்ஐசி தலைமை இயக்குனர் திருமதி அனுராதா பிரசாத், பரிதாபாத் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் அசிம் தாஸ், போராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1702985
-----
(Release ID: 1703023)
Visitor Counter : 202