குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கிராமங்களில் மேம்பட்ட சுகாதார வசதிகள் கிடைக்க அரசு -தனியார் துறையினர் இணைந்து செயல்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் அழைப்பு
Posted On:
05 MAR 2021 5:26PM by PIB Chennai
கிராமங்களில் மேம்பட்ட சுகாதார வசதிகள் கிடைக்க அரசு -தனியார் துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத்தின் நவ்சாரி பகுதியில் நிராலி பல்நோக்கு மருத்துவமனைக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
நல்ல ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி, கொவிட்-19 தொற்று, நமக்கு மதிப்பு மிக்க பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. நல்ல சுகாதாரமான அமைப்புதான், உண்மையிலேயே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.
தரமான மற்றும் மலிவான சுகாதார அமைப்புதான் ஏழைகளின் நிதி சுமையை குறைக்க முடியும், உற்பத்தியை மேம்படுத்த முடியும்,
பள்ளிகளுக்கு மாணவர்கள் வராமல் இருப்பதை தடுக்க முடியும். இறுதியாக இது வளர்ச்சியுடன் வலுவான தொடர்புடையதாக உள்ளது. நல்ல ஆரோக்கியம், தனி நபருக்கு, சமுதாயத்துக்கு சொத்து போன்றது.
சுதந்திரம் பெற்றதில் இருந்து சுகாதாரத்துறையில் பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், சில சவால்கள் உள்ளன. இதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.
நமது சுகாதார அமைப்பை மேம்படுத்துவதில், தனியார் துறை, அரசு, சிவில் சொசைட்டி மற்றும் இதர அமைப்பினர் இணைந்து செயல்பட வேண்டும்.
மன நலம் தொடர்பான விஷயங்களில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் மன நல பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மன நல பாதிப்பில் கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள தாக்கம் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை.
மனநலத்துடன் தொடர்புடைய களங்கத்தை போக்கி, மனநல பிரச்னைகளை தீர்க்க ஒரு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.
தொற்று அற்ற நோய்கள் அதிகரித்து வருவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை முறை நோய்களான புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்றவற்றால் நாட்டில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது குறித்தும் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மந்தமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் குறித்த பிரசாரத்தை அரசு மற்றும் தனியார் துறை சுகாதார நிபுணர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
உடல்நலம் என்பது “உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்’’ மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு முயற்சியைக் குறிக்கிறது.
இந்த அணுகுமுறையுடன், மருத்துவ நலனுக்கு மருத்துவர்களும், மருத்துவமனைகளும் மக்கள் மைய அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.
இவ்வழியில் செயல்பட்டு, மனிதர்களின் துன்பங்களைப் போக்கி மகிழ்ச்சியை பரப்ப நாம் ஒன்றாக முயற்சிக்க வேண்டும்.
சுகாதார கட்டமைப்பில் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள இடைவெளியை போக்க வேண்டும். இதற்கு தனியார் துறையினர் பின்தங்கிய நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்களில் மக்களுக்கு மலிவான மருத்துவ வசதியை விரிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு பேசினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1702703&RegID=3&LID=1
*************
(Release ID: 1702752)
Visitor Counter : 193