பிரதமர் அலுவலகம்
தனியார் மயமாக்குதல் மற்றும் சொத்துக்களை விற்று முதலாக்குதல் தொடர்பான வெபினாரில் பிரதம மந்திரி ஆற்றிய உரையின் உத்தேச தமிழ் மொழிபெயர்ப்பு
Posted On:
24 FEB 2021 7:40PM by PIB Chennai
வணக்கம்!
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு உங்களில் பலருடன் நான் விவாதித்து இருக்கிறேன். இந்த பட்ஜெட் இந்தியாவை மீண்டும் வளர்ச்சிப் பாதையின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் துறையின் பங்கேற்பையும் அரசுத்துறை – தனியார்துறை கூட்டுப் பங்கேற்பின் வாய்ப்பையும் இந்த பட்ஜெட் கவனத்தில் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாக முதலீடுகளை விலக்கிக் கொள்ளுதலும் சொத்துக்களை விற்று முதலாக்குவதும் அமைந்துள்ளது.
நண்பர்களே,
நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அந்தக் காலகட்டமும் தேவைகளும் வெவ்வேறாக இருந்தன. 50-60 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் கொள்கைகளை மேம்படுத்த வேண்டிய தேவை இருந்தது. இன்று அத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது, நமது முக்கியமான இலக்கு என்பது அரசு நிதியை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதுவே ஆகும்.
இழப்பை ஏற்படுத்தும் பல பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது உள்ளன. வரி செலுத்துவோரின் பணத்தின் மூலமாக அந்த நிறுவனங்களில் பலவற்றுக்கு ஆதரவு தர வேண்டியதாக உள்ளது. நியாயமாகப் பார்த்தால் இந்த நிதியானது ஏழைகளுக்கும் ஆசைகளைச் சுமந்து கொண்டுள்ள இளைஞர்களுக்கும் செலவு செய்யப்பட வேண்டியது ஆகும். அப்படிச் செய்யாமல் நிறுவனங்களுக்காக பயன்படுத்தப்படுவதால் இது பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இருப்பதாலேயே தொடர்ந்து அவற்றை நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பிட்ட பிரிவினரின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது அல்லது அதற்கு முக்கியத்துவம் உள்ளது என்றால் அந்த பொதுத்துறை நிறுவனம் தேவை என்று புரிந்து கொள்ள முடியும்.
நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் வர்த்தகத்துக்கும் தேவையான முழு ஆதரவைத் தர வேண்டியது அரசின் பொறுப்பாகும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அரசே தொழில் நிறுவனங்களை நடத்துவதும் உரிமையாளராக இருப்பதும் தேவையற்ற ஒன்றாகவும் அநாவசியமான ஒன்றாகவும் உள்ளது. எனவே வர்த்தகத்தில் அரசு ஈடுபடத் தேவையில்லை என்று நான் கூறுகின்றேன்.
அரசின் கவனம் மக்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் இருக்க வேண்டும். அரசாங்கத்தின் அதிகபட்ச ஆற்றல், மூலவளங்கள் மற்றும் திறன் ஆகியன நல்வாழ்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அரசு வர்த்தகத்தில் ஈடுபட்டால் அது கடுமையான இழப்பை ஏற்படுத்தும்.
முடிவு எடுத்தல் என்ற செயல்முறையில் அரசின் முன்பு பல தடைகள் உள்ளன. வர்த்தக முடிவுகள் எடுப்பதில் அரசுக்கும் போதிய தைரியம் இல்லை. ஒவ்வொருவரும் புகார்களுக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் பயப்படுகின்றனர். அதனால்தான் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என நினைக்கின்றனர். எனக்கான பொறுப்பு குறிப்பிட்ட கால வரம்பு வரைதான் என்ற எண்ணமே இதற்குக் காரணம் ஆகும். எனக்குப் பிறகு யாராக இருந்தாலும், அவர் அதைப் பார்த்துக் கொள்வார் என்று முடிவு ஏதும் எடுக்காமல் இருக்கின்ற நிலையே தொடர்கிறது.
அத்தகைய அணுகுமுறையைக் கடைபிடித்து ஒரு வர்த்தகத்தை நடத்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். இதனுடைய மற்றொரு அம்சம் என்னவென்றால், அரசு வர்த்தகம் மேற்கொள்ளத் தொடங்கினால் அதனுடைய மூலவளங்கள் குறையத் தொடங்கி விடும் என்பதுதான். சிறந்த அலுவலர்களுக்கு இங்கு பற்றாக்குறை இல்லை. ஆனால் அவர்கள் அடிப்படையில் அரசை நிர்வாகம் செய்வதற்குப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். அவர்கள் கொள்கைகள், விதிகள் சரியாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யவும், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் அதற்கான கொள்கைகளை உருவாக்கவும் செய்வார்கள். இத்தகைய பயிற்சிகளைப் பெற்றுள்ள அந்த அதிகாரிகள் இவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்கள். நீண்டகாலம் மக்களோடு இவர்கள் பணியாற்றி வருபவர்கள். மிகப் பெரிய நாட்டிற்கு இத்தகைய மக்கள் நலப் பணிகள் முக்கியமானவை ஆகும்.
ஆனால் அரசு வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கினால், அத்தகைய பணிப் பொறுப்புகளில் இருந்து சிறந்த அதிகாரிகளைத் திரும்பப் பெற்று அவர்களை புதிய துறையில் பணி செய்ய வைக்க வேண்டியது இருக்கும். ஒருவகையில் அவர்களது திறமைக்கு நாம் அநீதி இழைப்பதோடு பொதுத்துறை நிறவனத்துக்கும் அநீதி இழைப்பதாக இது அமைந்துவிடும். இதன் விளைவாக அதிகாரிகளுக்கு துன்பம் ஏற்படுவதோடு தொழிலுக்கும் இழப்பு ஏற்படும். பல வழிகளில் நாட்டுக்கும் கேடு ஏற்படுத்தும். நமது அரசின் நோக்கம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் மக்கள் வாழ்வில் அநாவசியமான அரசாங்கக் குறுக்கீடுகளைக் குறைப்பதுமே ஆகும். அதனால் மக்களின் வாழ்க்கையில் அரசு அக்கறை கொண்டிருக்கவில்லை எனக் கூற முடியாது, அரசின் செல்வாக்கும் இருக்காது.
நண்பர்களே,
தற்போது அரசிடம் குறைவாகப் பயன்படுத்தப்படும் மற்றும் பயன்படுத்தப்படாத சொத்துக்கள் பல உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு நாங்கள் தேசிய சொத்துக்களை விற்கும் முதல் வழிமுறையை அறிவித்துள்ளோம். எண்ணெய், எரிவாயு, துறைமுகங்கள், விமானநிலையங்கள், மின்னாற்றல் போன்ற துறைகளில் அத்தகைய 100 சொத்துக்களை விற்று முதலாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இந்தச் சொத்துகளில் சுமார் ரூ.2.5 டிரில்லியன் முதலீடுகளுக்கு வாய்ப்பு உள்ளது. அரசின் எதிர்கால முழக்கம் விற்று முதலாக்கு மற்றும் நவீனப்படுத்து என்பதே ஆகும்.
அரசு ஒரு குறிப்பிட்ட சொத்தை விற்கிறது என்றால் அது தனியார் துறையால் பதிலீடு செய்யப்படுகிறது என்று அர்த்தமாகும். தனியார் துறையினர் முதலீடு செய்வதோடு மிகச் சிறந்த உலகளாவிய நடைமுறையையும் கொண்டு வருகின்றனர். அதிகத் தரம் வாய்ந்த ஊழியர்களை நியமிப்பதோடு நிர்வாக மாற்றம் செய்து நவீனத்துவத்தையும் புகுத்துகின்றனர். புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.
செயல்முறை வெளிப்படையானதாக இருப்பதற்கு கண்காணிப்பும் அவசியம். எனவே விற்று முதலாக்குதல் மற்றும் நவீனப்படுத்துதல் மூலம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் திறன் மிக்கதாக செய்ய முடியும்.
நண்பர்களே,
அரசின் முடிவால் பெறப்படும் தொகை மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். ஏழைகளுக்கு வீடு கட்டித் தருதல், கிராமங்களில் சாலைகள் அமைத்தல், பள்ளிக்கூடங்கள் திறத்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் ஆகியவற்றுக்கும் இந்தத் தொகை பயன்படுத்தப்படும். சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கான சில சேவைகளில் போதாமை உள்ளது. இனி மேலும் நாடு இதைப் போக்க காத்திருக்க முடியாது.
சாதாரண மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதுவே நமது முன்னுரிமைப் பணியாகும். சொத்துக்களை விற்று முதலாக்குதல் மற்றும் தனியார் மயமாக்குதல் என்பது குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்க உதவும். தனியார் மயமாக்குதல் என்பது திறமையுள்ள இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.
நண்பர்களே,
நமது நோக்கம் என்பது பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்கையில் தெளிவாக வெளிப்படுகிறது. நான்கு முக்கியமான துறைகள் தவிர பிற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்க அரசு முடிவு எடுத்துள்ளது. அதிலும் இந்த முக்கிய துறைகளில்கூட மிகவும் குறைந்தபட்ச பொதுத்துறை நிறுவனங்களே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் உங்களுக்காக புதிய முதலீடு வாய்ப்புகளை இது உருவாக்கும். அதே போன்று இந்தியாவில் அதிக அளவு வேலை வாய்ப்புகளும் உருவாகும் நிர்வாகம் மாறும்போது தொழிற் நிறுவனங்கள் புதிய உச்சங்களை அடையும். தற்போதைய நிலைமையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு இத்தகைய நிறுவனங்களை மதிப்பிடக் கூடாது. அவற்றில் மறைந்திருக்கும் எதிர்கால வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
நண்பர்களே,
கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்போது வெளிப்படைத் தன்மை, போட்டி, சரியான செயல்முறைகள் மற்றும் நிலையான கோட்பாடுகளை உறுதி செய்வது அவசியமானதாகும். விலை மற்றும் பங்குதாரர் ஆகியவற்றுக்கு உலகில் உள்ள சிறந்த நடைமுறைகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எடுக்கப்படும் முடிவுகள் மக்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கின்றதா எனப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
டிசம்பரில் மெய்நிகர் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் நீங்கள் அரசின் சொத்து நிதியம் மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தின் மீதான வரி விதிப்பை மேம்படுத்த வேண்டும் என்பது போன்ற சில பரிந்துரைகளைச் செய்து இருந்தீர்கள். அந்த பரிந்துரைகள் இந்த பட்ஜெட்டில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களின் பிரச்சனைகளை விரைவில் தீர்த்து வைக்க அதிகாரம் அளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவை நாங்கள் உருவாக்கி உள்ளோம். அதே போன்று அதிக அளவில் முதலீடு செய்பவர்களுக்கு ஒற்றைப் புள்ளி தொடர்பு அமைப்பை உருவாக்கி உள்ளோம்.
நண்பர்களே,
இந்தியா வர்த்தகம் மேற்கொள்வதற்கான முக்கிய இடமாக மாறியுள்ளது. இந்தியாவில் ஒரே சந்தை – ஒரே வரி விதிப்பு முறை உள்ளது. இன்று இந்தியாவில் கம்பெனிகள் வர்த்தகம் தொடங்கவும் வெளியேறவும் சிறந்த வழிமுறைகள் உள்ளன. விதிகளுக்கு இசைந்து நடப்பதில் உள்ள பிரச்சனைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் வரிவிதிப்பு முறையும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தொழிலாளர் சட்டங்களும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
நண்பர்களே,
நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் எதிர்பாராத சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். உற்பத்தி தொடர்பான ஊக்கத்தொகை அவர்களை ஈர்க்கிறது. கடந்த சில மாதங்களில் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. எளிதாக வர்த்தகம் மேற்கொள்வதற்கு மத்திய அரசு மட்டும் அல்லாமல் மாநில அரசுகளும் உதவுகின்றன.
நண்பர்களே,
இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றுவதற்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல்முனை தொடர்பு வசதிகளுக்கான பணிகள் முன்னேற்றம் பெற்றுள்ளன. ரூ.111 டிரில்லியன் தேசிய உள்கட்டமைப்பு வழிமுறையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உருவாக்கி வருகிறோம். தனியார் துறையில் ரூ.25 டிரில்லியன் முதலீட்டுக்கு வாய்ப்பு உள்ளது. பல முதலீட்டாளர்கள் தங்களது முதலாவது அலுவலகத்தை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டு வருகின்றார்கள். நான் அனைத்து நண்பர்களையும் வரவேற்கின்றேன். குஜராத் சர்வதேச நிதிசார் தொழில்நுட்ப நகரத்தில் (GIFT CITY) உள்ள சர்வதேச நிதிசார் மையம் உங்களுக்கு மிகப் பெரும் உதவியாக செயல்படும்.
நண்பர்களே,
நாம் அனைவரும் இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி மிகச் சிறந்த உலகத்திற்காக சுயசார்பு இந்தியாவைக் கட்டமைப்போம். அதிக எண்ணிக்கையில் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற உங்களுக்கு நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பட்ஜெட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த உங்கள் உதவி உடனடியாகத் தேவை. உங்கள் அனுபவம், அறிவு மற்றும் ஆற்றல் ஆகியவை இந்தியாவின் நம்பிக்கைகள் மற்றும் ஆசைகளுடன் புதிய உலகை உருவாக்க உதவும் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு மீண்டும் நன்றி!
உங்களின் ஆலோசனைகளை எதிர்நோக்கி இருக்கிறேன்.
*****************
(Release ID: 1701414)
Visitor Counter : 369
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam