பிரதமர் அலுவலகம்

அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழா மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 22 FEB 2021 4:02PM by PIB Chennai

பாரத மாதா கீ ஜே

பாரத மாதா கீ ஜே

பாரத மாதா கீ ஜே

தேமாஜி பகுதியிலிருந்து இந்த சிறப்புவாய்ந்த தருணத்தில் அஸ்ஸாம் மக்களுக்கு எனது வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள அஸ்ஸாம் ஆளுநர் பேராசிரியர் ஜக்திஷ் முகி அவர்களே, மக்களால் கொண்டாடப்படும் மாநில முதலமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு.தர்மேந்திர பிரதான், திரு.ராமேஷ்வர் தெலி அவர்களே, அஸ்ஸாம் மாநில அமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மாநில அரசின் மற்ற அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு பெருமளவில் கூடியுள்ள எனது அருமை சகோதர, சகோதரிகளே.

தேமாஜி பகுதிக்கு மூன்றாவது முறையாக வந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்.

அஸ்ஸாம் மாநிலத்தின் சரிசமமான வளர்ச்சிக்கு மத்திய அரசும், அஸ்ஸாம் மாநில அரசும் உறுதிபூண்டுள்ளோம். இந்த வளர்ச்சியின் மிகப்பெரும் அடிப்படை என்பது அஸ்ஸாமின் கட்டமைப்பே ஆகும்.

நண்பர்களே,

வடக்கு கரைப் பகுதியில் ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதிலும், முந்தைய அரசுகள் இந்தப் பிராந்தியத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே பார்த்தன. இந்தப் பிராந்தியத்துக்கு நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த போகிபீல் மேம்பாலப் பணிகளை நமது அரசு விரைவுபடுத்தியது. நமது அரசு பதவியேற்றதற்குப் பிறகே, வடக்கு கரைப் பகுதிக்கு அகல ரயில் பாதை வந்தடைந்தது. பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் கட்டப்பட்ட இரண்டாவது பாலமான கலிபுமுரா பாலம் மூலம், இந்த பிராந்தியத்தின் இணைப்பு வலுப்படும். இதுவும் கூட வேகமாக செயல்படுத்தப்பட்டது. வடக்கு கரைப் பகுதியில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

இந்த தொடர் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக, அஸ்ஸாம் மாநிலத்துக்கு புதிய பரிசாக ரூ.3000 கோடிக்கும் அதிகமான எரிசக்தி மற்றும் கல்வித்துறை கட்டமைப்பு திட்டங்கள் கிடைத்துள்ளன.

சுத்திகரிப்பதற்கும், அவசரகால பயன்பாட்டுக்காகவும், இந்தியாவில் பெட்ரோலிய சேமிப்பு அளவை கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளோம். பொங்கைகாவோன் சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிக்கும் திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள எரிவாயு பிரிவு மூலம், இங்கு சமையல் எரிவாயு உற்பத்தித் திறன் அதிகரிக்க உள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்குப் பகுதி மக்களின் வாழ்க்கைக்கு வசதிகளை ஏற்படுத்த உள்ளது. மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உள்ளது.

சகோதர, சகோதரிகளே

ஒருவருக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கும்போது, அவரது நம்பிக்கை பெருமளவில் அதிகரிக்கும். நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம், பிராந்தியத்தையும், நாட்டையும் கூட மேம்படுத்தும். இதற்கு முன்னதாக வசதிகள் கிடைக்கப் பெறாத பகுதிகள் மற்றும் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நலனுக்காகவே நமது அரசு தற்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கு வசதியை வழங்க வேண்டும் என்பதை அரசு நிர்வாகம் தற்போது வலியுறுத்தி வருகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று எரிவாயு இணைப்பு அளவு 100 சதவீதமாக உள்ளது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, பொங்கைகாவோன் சுத்திகரிப்பு மையத்தை சுற்றியுள்ள மாவட்டங்களில் சமையல் எரிவாயு இணைப்பின் அளவு, மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு கோடி ஏழை சகோதரிகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைக்கச் செய்ய இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் வழிவகை செய்துள்ளது.

நண்பர்களே,

நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் மின்சார இணைப்பு பெறாத 18,000 கிராமங்களில் பெரும்பாலானவை வடகிழக்கு அசாமைச் சேர்ந்தவை. இன்று, உலகின் மிகப்பெரும் எரிவாயு குழாய் திட்டங்களில் ஒன்றான பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின்கீழ், இந்தியாவின் கிழக்குப் பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இன்று, கொண்டுவரப்பட்டுள்ள சமையல் எரிவாயு குழாய் இணைப்புகள், ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்பட்டுள்ள ஆப்டிகல் பைபர் அமைப்புகள், ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழாய்கள், என அனைத்து கட்டமைப்புகளும் இந்திய தாயின் மடியில் அமைக்கப்பட்டுள்ளன. இவை வெறும் இரும்புக் குழாய்களோ, ஃபைபர்களோ அல்ல, இவை எல்லாம் இந்திய தாயின் புதிய எதிர்காலத்துக்கான வாய்ப்புகள்.

சகோதர, சகோதரிகளே,

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்தத் திறனை அதிகரிக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. அஸ்ஸாம் மாநில அரசின் முயற்சியால், இங்கு 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தேமாஜி பொறியியல் கல்லூரியை நாட்டுக்கு அர்ப்பணித்ததன் மூலமும், சுவால்குச்சி பொறியியல் கல்லூரியை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதன் மூலமும், நிலைமை மேலும் மேம்பட்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே,

புதிய கல்விக் கொள்கையை விரைந்து செயல்படுத்தவும் அஸ்ஸாம் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அஸ்ஸாமுக்கு புதிய தேசிய கல்விக் கொள்கை பலனளிக்க உள்ளது. அதேபோல, அதன் பழங்குடியின மக்கள், தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக பணியாற்றிவரும் எனது சகோதர, சகோதரிகளின் குழந்தைகள் ஆகியோருக்கும் பயன் அளிக்க உள்ளது. இதன் காரணமாகவே, உள்ளூர் மொழிகளில் படிக்கவும், உள்ளூர் நிபுணர்களுடன் இணைந்து திறனை மேம்படுத்தவும் வலியுறுத்தப்படுகிறது. உள்ளூர் மொழியில் மருத்துவம் அல்லது தொழில்நுட்பக் கல்வி அளிக்கப்படும்போது, ஏழைகளின் குழந்தைகளும் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களாக மாறுவார்கள். இதனால், நாடு பயனடையும். அஸ்ஸாம் போன்ற மாநிலங்களுக்கு தேயிலை, சுற்றுலா, கைத்தறி, கைவினைப் பொருட்கள் ஆகியவை சுயசார்புக்கான மிகப்பெரும் பலமாகும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்தத் திறனை கற்றுக் கொள்ளும்போது, இங்குள்ள இளைஞர்கள் பெருமளவில் பயனடைய உள்ளனர். சுயசார்புக்கான அடித்தளம் பள்ளி, கல்லூரிகளில் தான் இடப்படும். பழங்குடியினப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான புதிய ஏகலைவா மாதிரிப் பள்ளிகளை திறக்கவும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், அஸ்ஸாம் மாநிலமும் பயனடையும்.

நண்பர்களே,

விவசாயிகளின் தேவைகளை மனதில் கொண்டு, அவர்களது வங்கிக்கணக்குக்கு பணத்தை நேரடியாக செலுத்துவது, அல்லது ஓய்வூதியத் திட்டத்தை தொடங்குவது அல்லது தரமான விதைகளை வழங்குவது அல்லது மண் சுகாதார அட்டைகளை வழங்குவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மீன்வளத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி, மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீன்வளத் துறையை மேம்படுத்தும் வகையில், நாடு சுதந்திரம் பெற்றது முதல் செய்யப்பட்ட ஒதுக்கீட்டைவிட அதிக அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன் வர்த்தகத்துக்காக ரூ.20,000 கோடி என்ற மிகப்பெரும் தொகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது அஸ்ஸாமில் உள்ள நமது மீனவ சகோதரர்களுக்கும் பலன் அளிக்கும். அஸ்ஸாமில் உள்ள மீனவர்கள் பிடிக்கும் மீன்களை நாடு முழுமைக்கும் மட்டுமல்லாமல், சர்வதேச சந்தைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அரசின் விருப்பம். இதற்காக, விவசாயிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நண்பர்களே,

இந்த தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் நமது சகோதர, சகோதரிகளின் வாழ்க்கைக்கு உதவுவதே நமது அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. சிறு தேயிலை விவசாயிகளுக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ள அஸ்ஸாம் அரசுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை வகுக்கவே நாங்கள் விரும்புகிறோம். அஸ்ஸாமுக்கு நான் பல முறை வருகிறேன். இதன்மூலம், உங்களது வளர்ச்சிப் பாதையில் என்னாலும் கூட பங்கேற்க முடியும்.

சகோதர, சகோதரிகளே,

தேர்தலுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். எனக்குத் தெரிந்தவரை, கடந்த முறை மார்ச் 4-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன். இந்த முறையும்கூட, மார்ச் முதல் வாரத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். இது தேர்தல் ஆணையத்தின் பணி. எனினும், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, அஸ்ஸாம், மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவற்றுக்கு எத்தனை முறை செல்ல முடியுமோ, அத்தனை முறை செல்வதற்கு நான் முயற்சி மேற்கொள்வேன். உதாரணமாக, கடந்த முறை மார்ச் 4-ல் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த முறை மார்ச் 7 அல்லது அதனையொட்டிய சமயத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதற்கு முன்னதாக எத்தனை முறை வர முடியுமோ, அதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்வேன்.

அஸ்ஸாம் மாநிலத்தை சுயசார்பு கொண்டதாக மாற்றவும், இந்தியாவை கட்டமைப்பதற்காக தனது பங்களிப்பை அஸ்ஸாம் வழங்குவதற்காகவும், அஸ்ஸாமில் உள்ள இளம் தலைமுறையினரின் வளமான எதிர்காலத்துக்காகவும், இன்று தொடங்கப்பட்ட அல்லது அடிக்கல் நாட்டிவைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்காக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மீனவர்கள், விவசாயிகள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், எனது பழங்குடியின சகோதர, சகோதரிகள் ஆகியோருக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத தெரிவித்துக் கொள்கிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.



(Release ID: 1700470) Visitor Counter : 201