பிரதமர் அலுவலகம்

காரக்பூர் ஐஐடி 66வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

சுய-விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் தன்னலமற்றதன்மை என்ற 3 மந்திரங்களை கூறினார்

Posted On: 23 FEB 2021 1:50PM by PIB Chennai

காரக்பூர் ஐஐடி-யின் 66வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று உரையாற்றினார். மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

இன்றைய தினமானது காரக்பூர் ஐஐடி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் முக்கியமான நாள் அல்ல. மாணவர்கள் ஒட்டு மொத்த இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், புதிய இந்தியாவுக்கும் இது முக்கியமான நாள் என பிரதமர் கூறினார். பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், வாழக்கையில் புதிய பயணத்தை தொடங்குவதால், அவர்கள், தொடக்க நிறுவனங்களை உருவாக்குவது, புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பது ஆகியவற்றை நோக்கி பணியாற்ற வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். அது நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் கூறினார். மாணவர்கள் இன்று பெற்றுள்ள பட்டம், கோடிக்கணக்கான மக்களின் ஆசைகளை பிரதிபலிக்கிறது. அதை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் கூறினார்.

நாளைய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க, எதிர்கால தேவையை எதிர்பார்த்து பணியாற்றுவதுதான் இன்றைய தேவை என பிரதமர் கூறினார். பொருட்களை விரிவாக பார்க்கும் திறன் ஒரு பொறியாளருக்கு உள்ளது. இந்த புரிதல்தான் எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படையை உருவாக்குகிறது. கோடிக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றுவதற்கான, வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான, நாட்டின் வளங்களை காப்பதற்கான தீர்வுகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

சுய சந்தேகங்கள், எதிர்கால தடைகளை போக்க, 3 மந்திரங்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, தன்னலமற்றதன்மை ஆகிய 3 மந்திரங்களையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார். மாணவர்கள் தங்கள் ஆற்றலை உணர்ந்து, தன்னம்பிக்கையுடனும், தன்னலமற்ற வகையிலும் முன்னேற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவசரப்படுவதற்கு இடமில்லை என்று பிரதமர் கூறினார். புதுமை கண்டுபிடிப்புக்காக நீங்கள் பணியாற்றும்போது, உங்களுக்கு முழு வெற்றி கிடைக்காமல் போகலாம். அந்த தோல்வியையும் நீங்கள் வெற்றியாக கருத வேண்டும். ஏனென்றால் அதிலிருந்தும் சிலவற்றை உங்களால் கற்க முடியும். புதிய இந்தியாவின் மாறிவரும் தேவைகளையும், ஆசைகளையும் நிறைவேற்ற, 21ம் நூற்றாண்டில், இந்திய தொழில்நுட்ப கழகங்கள், உள்நாட்டு தொழில்நுட்ப கழங்கங்கள் என்ற அடுத்த நிலைக்கு செல்ல வேண்டியதுள்ளது என பிரதமர் கூறினார்.

 

பருவநிலை மாற்ற சவால்களுடன் உலகம் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியா சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி கருத்தை தெரிவித்து அதை செயல்படுத்தியது. சூரிய சக்தி மின்சாரம் ஒரு யூனிட் விலை மிக குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. ஆனால் வீட்டுக்கு வீடு சூரிய சக்தி மின்சாரம் அளிப்பதில் இன்னும் பல சவால்கள் உள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும், வலுவான, சாதகமான தொழில்நுட்பம் இந்தியாவுக்கு தேவை என அவர் கூறினார்.

 

பேரிடர் மேலாண்மை விஷயத்தில், உலகம் இந்தியாவை பார்க்கிறது என பிரதமர் கூறினார். முக்கியமான பேரிடர் சமயத்தில், வாழ்கையோடு, உள்கட்டமைப்பு அதிகம் பாதிக்கப்படுகிறது. இதை 2 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த இந்தியா, ஐக்கிய நாடுகள் சபையில் பேரிடர் மீட்பு கட்டமைப்பை நிறுவும் முயற்சியை எடுத்தது.

 

தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க புதுமை கண்டுபிடிப்பு தேவை என பிரதமர் வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வை, தொழிற்துறை அளவில் கொண்டு சென்றது, இணையதள விஷயங்கள், நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் காரக்பூர் ஐஐடி மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது. கொரோனாவை எதிர்த்து போராடுவதில் காரக்பூர் ஐஐடி-யின் தொழில்நுட்ப தீர்வுகள் பயனுள்ளதாக இருந்தன. சுகாதார தொழில்நுட்பத்தில் எதிர்கால தீர்வுகளை கண்டுபிடிப்பதில், காரக்பூர் ஐஐடி விரைவாக பணியாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தனிநபர் சுகாதார சாதனத்துக்கு மிகப் பெரிய சந்தை உருவாகியுள்ளது என அவர் கூறினார். சுகாதாரம் மற்றும் உடல் தகுதி தொடர்பான சாதனங்களுக்கான சந்தையும் அதிகரித்து வருகிறது. தனிநபர் சுகாதார சாதனங்கள் இந்தியாவில் மலிவான விலையில் வழங்குவதற்கான தொழில் நுட்பத்தை உருவாக்க வேண்டும் என அவர் கூறினார்.

 

கொரோனாவுக்குப்பின் அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு துறையில் இந்தியா உலகளவில் முக்கிய பங்காற்றும் நாடாக உருவெடுத்துள்ளது என பிரதமர் கூறினார். இந்த ஊக்கத்துடன், அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான பட்ஜெட், அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு, வரைபடம் மற்றும் புவியியல் தரவு ஆகியவற்றை கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசு விடுவித்துள்ளது என அவர் கூறினார். இந்த நடவடிக்கை தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பலத்தை அளிக்கும், தற்சார்பு இந்தியாவுக்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தும் மற்றும் இளம் தொடக்க நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு புதிய சுதந்திரத்தை அளிக்கும்.

 

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் காரக்பூர் ஐஐடியின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். நமது எதிர்கால புதுமை கண்டுபிடிப்பின் பலமாக இருக்கும் அறிவியல் ஆய்வில், காரக்பூர் ஐஐடி பின்பற்றும் வழியை அவர் புகழ்ந்தார். நாட்டின் 75வது சுதந்திரத்தை முன்னிட்டு, காரக்பூர் ஐஐடி கண்டுபிடித்த 75 முக்கிய புதுமை கண்டுபிடிப்புகளை ஒன்றாக தொகுத்து அதை நாட்டுக்கும், உலகுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த உத்வேகங்கள் நாட்டிற்கு புதிய ஊக்கத்தை அளித்து நம்பிக்கையை ஏற்படுத்தும் என பிரதமர் கூறினார்.



(Release ID: 1700297) Visitor Counter : 123