பிரதமர் அலுவலகம்
நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்ற குழுவின் ஆறாவது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய துவக்க உரையின் தமிழாக்க சாராம்சம்
Posted On:
20 FEB 2021 2:10PM by PIB Chennai
நிதி ஆயோக்கின் ஆட்சிமன்ற குழுவுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். மத்திய அரசும், மாநிலங்களும் ஒன்றிணைந்துசெயல்பட்டு, ஒரு திட்டவட்டமான திசையில் நகர்கின்றன என்பதே நாட்டின் முன்னேற்றத்தின் சாரமாகும். கூட்டுறவு கூட்டாட்சிவாதத்தை நாம் இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும். போட்டியிடக்கூடிய வகையிலான கூட்டுறவு கூட்டாட்சிவாதத்தை, மாநில மற்றும் மாவட்ட அளவிற்குக் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும், இதனால் வளர்ச்சிக்கான போட்டி தொடரும். வளர்ச்சி, முக்கியத்துவம் பெறும். நாட்டை ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கான போட்டியை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து நாம் இதற்கு முன்பு பலமுறை விவாதித்துள்ளோம், இன்று, இந்த மாநாட்டில் இது வலியுறுத்தப்படுவது இயற்கையே. கொரோனா காலத்தின்போது, மாநில, மத்திய அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டபோது, முழு நாடும் எவ்வாறு வெற்றி பெற்றது என்பதையும், இந்தியாவைப் பற்றிய ஒரு நேர்மறையான பிம்பம் உலகில் உருவானது என்பதையும் நாம் கண்டோம்.
நண்பர்களே,
இப்போது, நாடு விடுதலையடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும்போது, இந்த குழுவின் கூட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சமூகத்தின் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குழுக்களை உருவாக்குமாறு மாநிலங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள், நாட்டின் முக்கிய முன்னுரிமைகளைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நிதி ஆயோக் மற்றும் அனைத்து மாநிலங்களின் முதன்மை அதிகாரிகளுக்குமிடையே ஆரோக்கியமான பட்டறை ஒன்று நடைபெற்றது. அதில் விவாதிக்கப்பட்ட அனைத்து அம்சங்களையும், இன்றைய கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முயற்சித்தோம். நாட்டின் உயர் முன்னுரிமைகளையும், மாநிலங்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நிரலில் மிகவும் குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளோம். இது எங்கள் விவாதத்தை மேலும் பயனுள்ளதாக மாற்றும்.
நண்பர்களே,
கடந்த சில ஆண்டுகளில், நம் நாட்டின் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு வங்கிக்கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிபோடுவது அதிகரிக்கப்பட்டது, சுகாதார வசதிகள் அதிகரித்தன. இலவச மின்சார இணைப்புகள், இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன; இலவச கழிப்பறை கட்டுமானத் திட்டங்கள் அதிகரித்தன. இவைகாரணமாக, ஏழை மக்களின் வாழ்க்கை முன்னெப்போதுமிராதவகையிலான மாற்றத்தை அடைந்துள்ளது. நாட்டின் அனைத்து ஏழைமக்களுக்கும் பக்கா கூரைகளை வழங்கும் இயக்கமும் விரைந்து முன்னேறி வருகிறது. சில மாநிலங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன, சில மாநிலங்கள் செயல்படுத்தும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். 2014 முதல் கிராமங்கள் மற்றும் நகரங்களில் 2.40 கோடிக்கும் அதிகமான வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. நாட்டின் ஆறு நகரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் வீடுகளை கட்டும் பணி நடந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். ஒரு மாதத்திற்குள், புதிய தொழில்நுட்பத்தின்மூலம், நாட்டின் ஆறு நகரங்களில் விரைவான மற்றும் நல்ல தரமான வீடுகளை உருவாக்க புதிய மாடல்கள் உருவாக்கப்படும். இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். நீர் பற்றாக்குறை மற்றும் நீரினால் பரவும் நோய்கள் காரணமாக, மக்களின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படாதவகையிலும், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைகளை அதிகரிக்காத வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் மிஷன் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 18 மாதங்களில் 3.5 கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் இணைய இணைப்பிற்கான முக்கிய ஆதாரமாக, பாரத் நெட் திட்டம், திகழ்கிறது. இதுபோன்ற அனைத்து திட்டங்களிலும் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படும் போது, பணிகளின் வேகம் அதிகரிப்பதோடு, அனைவரையும் திட்டப்பயன்கள் சென்றடைவது உறுதி செய்யப்படும்.
நண்பர்களே,
இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கு கிடைத்துள்ள நேர்மறை வரவேற்பு, புதிய நம்பிக்கையான சூழலை உருவாக்கியுள்ளது. நாட்டின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. நாடுவேகமாக முன்னேற விரும்புகிறது; நாடு இப்போது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நாட்டின் இளைஞர்கள் நாட்டின் மனதை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், எனவே மாற்றத்தை நோக்கி ஒரு புதிய ஆர்வம் உருவாகியுள்ளது. நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தில், நாட்டின் தனியார் துறை எவ்வாறு அதிக உற்சாகத்துடன் முன்வருகிறது என்பதையும் நாம் காண்கிறோம். ஒரு அரசாங்கமாக, தனியார் துறையின் இந்த உற்சாகத்தை, ஆற்றலை நாம் மதிக்க வேண்டும், சுயசார்பு இந்தியா இயக்கத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும் வழங்க வேண்டும். சுயசார்பு இந்தியா என்பது புதிய இந்தியாவை நோக்கிய ஒரு நகர்வாகும், அங்கு ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு அமைப்புக்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் முழுத் திறனைத் தாண்டி செல்ல வாய்ப்பு உள்ளது.
நண்பர்களே,
இந்தியாவை, தனது சொந்தத் தேவைகளுக்கு மட்டுமல்லாமல், உலகிற்காகவும் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றுவதே, சுயசார்பு இயக்கம். எனவே, நான் எப்போதும் ‘குறைபாடு எதுவுமில்லை, பாதிப்பு எதுவிமில்லை’’ என்பதை வலியுறுத்துகிறேன். நாம் நவீன உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும், புதுமைகளை ஊக்குவிக்க வேண்டும், தொழில்நுட்பத்தை அதிகபட்சம்பயன்படுத்த வேண்டும். கல்வி மற்றும் திறன்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
நண்பர்களே,
நமது வணிகங்கள், எம்எஸ்எம்இக்கள் மற்றும் தொடக்க நிலைநிறுவனங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். நமது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வலுவான அம்சங்கள் உள்ளன; ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தனிப்பட்ட சிறப்புகள் உள்ளன. நாம் உற்று நோக்கினால், பல சாத்தியங்கள் உள்ளன. நாட்டின் நூற்றுக்கணக்கான மாவட்டங்களின் தயாரிப்புகளைசந்தைப்படுத்தவும், ஏற்றுமதிசெய்யவும் ஊக்கமளிக்கப்படுகிறது. இது மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டிக்கு வழிவகுக்கிறது. எந்த மாநிலம் அதிகம் ஏற்றுமதி செய்கிறது; பல வகையான தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது; அதிகபட்ச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது; விலையுயர்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்கிறது என்று மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு, போட்டியிருக்கவேண்டும். மாவட்டங்களிடையேயும், வட்டாரங்களிடையேயும் இ்வ்வாறான போட்டி நிலவ வேண்டும். மாநிலங்களின் வளங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாநிலங்களிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதியை நாம் ஆர்வத்துடன் கணக்கில் கொண்டு அதை அதிகரிக்க வேண்டும்.
கொள்கை கட்டமைப்பும், மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பும் மிக முக்கியமானது. எடுத்துக்காட்டாக, மீன்பிடித் தொழிலையும், கடலோர மாநிலங்களின் கடல்வளப் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கும், மீன்களை ஏற்றுமதி செய்வதற்கும் வரம்பற்ற வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசு பல்வேறு துறைகளிலும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன். நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. மாநிலங்களும் இந்த திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் அதிக முதலீட்டை ஈர்க்க வேண்டும். கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் இதன் அதிகபட்ச நன்மைகளைப் பெற வேண்டும். இதுபோன்ற நிறுவனங்களை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும், இதன் மூலம் உலகின் மிகக் குறைந்த கார்பரேட் வரி விகிதத்தின் பயனை உங்கள் மாநிலம் பெறமுடியும்.
நண்பர்களே,
இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் உள்கட்டமைப்பிற்காக வழங்கப்பட்ட நிதி பெரும்பாலும் பேசப்படுகிறது. உள்கட்டமைப்புக்கான செலவினம், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும். தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் திட்டத்தில் மாநிலங்களின் பங்கு 40 சதவீதமாகும், எனவே, மாநிலங்களும் மத்திய அரசும் கூட்டாகச் செயல்பட்டு, முன்னுரிமைகளை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். இப்போது, மத்திய அரசு தனது பட்ஜெட்டை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்துள்ளது. மாநில பட்ஜெட்டிற்கும் மத்திய பட்ஜெட்டிற்கும் இடையில் மூன்று முதல் நான்கு வாரங்கள் உள்ளன. மத்திய அரசின் பட்ஜெட்டுடன் இயைந்தவாறு, மாநிலங்களின் பட்ஜெட் உருவாக்கப்பட்டால், அவை ஒரேதிசையில் செல்ல முடியும். மாநிலங்களின் பட்ஜெட் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், மாநிலங்கள் தன்னிறைவு பெறுவதற்கும் மாநில பட்ஜெட்டும் முக்கியமாகும்.
நண்பர்களே,
15 வது நிதி ஆணையத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பொருளாதார வளங்களில் பெரும் உயர்வு ஏற்படப்போகிறது. உள்ளூர் மட்டத்தில் நிர்வாகத்தை மேம்படுத்துவது மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையாக அமைகிறது. இந்த சீர்திருத்தங்களில் தொழில்நுட்பம் மற்றும் பொது பங்கேற்பு மிகவும் அவசியம். இந்த ஒருங்கிணைப்பு மற்றும் விளைவுகளுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் குடிமை அமைப்புகளை பொறுப்பேற்கச் செய்யும் காலம் வந்துவிட்டது என்று நான் கருதுகிறேன். திட்டங்களைச் செயல்படுத்துவதில், கொரோனா காரணமாக தேவையான வேகம் சமீப காலங்களில் இல்லை. ஆனால், அதை மீண்டும்தீவிரப்படுத்தலாம்.
நண்பர்களே,
வேளாண்மை, மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் நாம் சில உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாய நாடு என்று அழைக்கப்பட்ட போதிலும், இன்று, சுமார் 65-70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சமையல் எண்ணெயை நாம் இடறக்குமதி செய்கிறோம். இதை நாம் நிறுத்தலாம். நம் விவசாயிகளின் கணக்குகளுக்குப் பணம் செலுத்தப்படலாம். இந்த பணத்திற்கு விவசாயிகளுக்கு உரிமை உண்டு. ஆனால் இதற்காக, அதற்கேற்ப திட்டங்களை உருவாக்க வேண்டும். சமீபத்தில், பருப்பு வகைகளை பரிசோதித்தோம், அது வெற்றிகரமாக அமைந்தது. பருப்பு வகைகளின் இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளது. இதுபோன்ற பல பொருட்கள் உள்ளன, தேவையற்ற பல உணவுப் பொருட்கள் நம்மேஜையில் உள்ளன. நம் நாட்டின் விவசாயிகளுக்கு இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்வதில் சிரமம் எதுவுமில்லை, அவர்களுக்கு கொஞ்சம் வழிகாட்டுதல் மட்டுமேதேவை. எனவே, நம் விவசாயிகள் நாட்டிற்கு மட்டுமல்லாமல், உலகிற்கே வழங்கக்கூடிய பல வேளாண் பொருட்கள் உள்ளன. அனைத்து மாநிலங்களும் தங்கள் மண்டலத்துக்கான வேளாண் காலநிலை திட்டத்தை முதன்மைப்படுத்தி திட்டமிடுவதும், அதற்கேற்ப விவசாயிகளுக்கு உதவுவதும் அவசியம்.
,
நண்பர்கள்,
கடந்த சில ஆண்டுகளில், விவசாயத்திலிருந்து கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு வரை ஒரு முழுமையான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கொரோனா காலத்தில் கூட, நாட்டில் விவசாய ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் நமது ஆற்றல் அதை விடப் பன்மடங்கு அதிகமாகும். தென்கிழக்கு ஆசியாவிற்கு இந்தியா சமைக்கப்படாதமீன்களை ஏற்றுமதி செய்கிறது என்பதை நாம் அறிவோம். மீன்கள் அங்கு பதப்படுத்தப்பட்டு பெரிய இலாபத்துடன் பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகளாக விற்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட மீன் பொருட்களை நேரடியாக பெரிய அளவில் நாம் ஏற்றுமதி செய்ய முடியாதா? நமது அனைத்து கடலோர மாநிலங்களும் தங்கள் சொந்த முயற்சியை மேற்கொண்டு, முழு உலக சந்தையிலும் தங்களுடைய தாக்கத்தை உருவாக்க முடியாதா? மேலும் பல துறைகள் மற்றும் பொருட்களின் நிலைமை இதுதான். நம் விவசாயிகளுக்குத் தேவையான பொருளாதார வளங்கள், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம் கிடைப்பதை உறுதிப்படுத்த சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியம்.
நண்பர்களே,
சமீபத்தில், ஒழுங்குமுறை மற்றும் அரசாங்கத்தின் தலையீட்டைக் குறைக்கும் பல சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண மக்கள் பின்பற்றவேண்டிய ஆயிரக்கணக்கான விதிமுறைகள் இருப்பதை நான் கவனித்தேன், அவற்றை அகற்றலாம்., இதுபோன்ற 1500 தொன்மையான சட்டங்களை சமீபத்தில் நாங்கள் ரத்து செய்தோம். இது தொடர்பாக ஒரு சிறிய குழுவை அமைக்குமாறு மாநிலங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நம்மிடம் தொழில்நுட்பம் உள்ளது. ஒரே விஷயங்களை மீண்டும் மீண்டும் வழங்குமாறு மக்களிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் மீதான இந்தச்சுமையை அகற்றுவோம். இதற்கு மாநிலங்கள் முன்வர வேண்டும். மத்திய அரசிடமும், அமைச்சரவைச் செயலாளரிடமும் இது குறித்து தொடர்ந்து கேட்டறியுமாறு கூறியுள்ளேன். விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கானதேவைகளை குறைந்தபட்சமாகக் குறைக்க வேண்டும். எளிதான வாழ்க்கைக்கும் இது முக்கியம்.
இதேபோல், நம் இளைஞர்களுக்கு அவர்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில் நாம் வாய்ப்பளிக்க வேண்டும். சில முக்கியமான முடிவுகள் சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது பரவலாக விவாதிக்கப்படவில்லை என்றாலும், அதன் விளைவுகள் மிகப்பெரியவை. OSP விதிமுறைகள் சீர்திருத்தப்பட்டன. இது இளைஞர்களுக்கு எங்கிருந்தும் வேலை செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்கியுள்ளது. இதன் காரணமாக நமது தொழில்நுட்பத் துறை மிகுந்தபயனடைந்துள்ளது.
சமீபத்தில், ஐ.டி துறையுடன் தொடர்புடைய சிலருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்களில் பலர், அவர்களது ஊழியர்களில் 95 சதவீதம் பேர் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்; அவர்களின் பணி நன்றாக நடக்கிறது என என்னிடம் கூறினர். இது எவ்வளவு பெரிய மாற்றம் என்பதை இப்போது நீங்கள் காண்கிறீர்கள். இந்த விஷயங்களை நாம் வலியுறுத்த வேண்டும். நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நாம் ரத்து செய்ய வேண்டும். சீர்திருத்தங்கள் மூலம் சமீபத்தில் நிறைய ரத்து செய்துள்ளோம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் ஒரு மிக முக்கியமான முடிவை எடுத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஜியோஸ்பேசியல் டேட்டா எனப்படும் புவியியல் தரவுகளுடன் தொடர்புடைய விதிகளும் தாராளமயமாக்கப்பட்டுள்ளன. நாம் இதை 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால், கூகிள் போன்றவை இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருக்கலாம், இதுபோன்றவற்றில் நம்மக்களின் திறமை இருக்கிறது, ஆனால் தயாரிப்பு நம்முடையது அல்ல. நாம்மேற்கொண்டுள்ள முடிவு நாட்டின் சாமானியர்களின் வாழ்க்கையை எளிதாக்க உதவும் என்று கருதுகிறேன்.
மேலும், நண்பர்களே, நான் இரண்டு விஷயங்களை வலியுறுத்த விரும்புகிறேன். இன்று, உலகில் நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்கு, நாம் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும், இதற்காக சட்டங்களையும் அமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும்.மேலும் மக்கள் வாழ்க்கைமுறை எளிதானதாக இருக்க வேண்டும். அதிலும நாம கவனம் செலுத்தவேண்டும்.
நண்பர்களே,
உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் இப்போது கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இன்று, நாம் நாள் முழுதும் விவாதிக்கப் போகிறோம். நாம் சிறு இடைவெளி எடுப்போம், ஆனால் அனைத்து தலைப்புகளையும் பற்றி பேசுவோம். இந்த நேரத்தில் உங்கள் அனைவரிடமிருந்தும் ஆக்கபூர்வமான, நேர்மறையான திட்டங்களை நான் கேட்பேன் என்று நான் நம்புகிறேன், நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல இது மிகவும் உதவியாக இருக்கும். மத்தியஅரசும், மாநிலங்களும் தங்கள் சக்தியை முடிந்த அளவு ஒரே திசையில் திரட்டட்டும், உலகில் இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை நாம் விட்டுவிடக்கூடாது. இந்த எதிர்பார்ப்புடன், இந்த முக்கியமான உச்சிமாநாட்டிற்கு உங்களை மீண்டும் வரவேற்கிறேன். நான் உங்கள் ஆலோசனைகளுக்காகக் காத்திருக்கிறேன்.
நன்றிகள் பல.
(Release ID: 1700226)
Visitor Counter : 217
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam