சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

அசாமில் இரண்டு பாலங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்


உள்ளூர் மக்களின் 10 ஆண்டு கால கோரிக்கையை இத்திட்டங்கள் பூர்த்தி செய்யும்: திரு கட்கரி

Posted On: 18 FEB 2021 3:18PM by PIB Chennai

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே இரண்டு முக்கிய பாலத்திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அசாம் மற்றும் மேகாலயா மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இத்திட்டங்கள் பூர்த்தி செய்கின்றன.

இந்நிகழ்ச்சியில் பேசிய, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி, ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான சாலை மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் அசாமில் நடைபெற்று வருவதாக கூறினார்.

ரூ 8,000 கோடி மதிப்பில் 1,300 கி.மீ நீளத்திற்கு 91 சாலைப் பணிகள் கடந்த ஆறு ஆண்டுகளில் அசாமில் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

2022-க்குள் மேலும் ரூ. 20,000 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவுறும் என்றும், ரூ. 30,000 கோடி மதிப்பிலான பணிகளுக்கான விரைவான திட்ட அறிக்கை இந்த ஆண்டுக்குள் தயாராகி விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

அசாமின் துப்ரி மற்றும் மேகாலயாவின் புல்பாரிக்கிடையே பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பாலத்தை கட்டுவதற்கான கோரிக்கை 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததாக திரு. கட்கரி கூறினார். இதன் மூலம், இவ்விரு இடங்களுக்கிடையேயான தூரம் 203 கிலோமீட்டர்கள் குறையும்.

இந்த பாலத்தின் மூலம் மேற்கு வங்கத்துடன் அசாம் மற்றும் மேகாலயாவுக்கு நேரடி இணைப்பு ஏற்படும்.

 மேற்கு வங்கத்தில் உள்ள செராம்பூரில் இருந்து அசாமில் உள்ள துப்ரி வரை 55 கிலோமீட்டருக்கான சாலையின் கட்டுமானம் வரும் அக்டோபரில் தொடங்கும். பூட்டான் மற்றும் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்வதற்கான தொலைவும் நேரமும் இதன் மூலம் குறையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699027

----



(Release ID: 1699223) Visitor Counter : 135