பிரதமர் அலுவலகம்

ராமச்சந்திரா மிஷன் 75வது ஆண்டு விழாவில் பிரதமர் உரை


கொரோனாவை கையாள்வதில் வீட்டு மருத்துவ அறிவு மற்றும் யோகா-ஆயுர்வேதாவுக்கு முக்கிய பங்கு: பிரதமர்

நோயைக் குணமாக்குதல் என்பதையும் தாண்டியது உடல் நலன் குறித்த இந்தியாவின் சிந்தனை: பிரதமர்

உலக மக்களுக்குப் புரிகிற மொழியில் யோகா, ஆயுர்வேதத்தை வழங்க வேண்டும்: பிரதமர்

ஆன்மிக மற்றும் உடல் நலனுக்கான சுற்றுலா மையமாக இந்தியாவை உருவாக்க அழைப்பு

Posted On: 16 FEB 2021 5:28PM by PIB Chennai

ராமச்சந்திரா மிஷன் 75வது ஆண்டை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். மக்களிடம் அர்த்தமுள்ள வாழ்வு, அமைதி, ஆரோக்கியம், ஆன்மிக நலவாழ்வு ஆகிய எண்ணங்களை உருவாக்கியதில் இந்த மிஷன் ஆற்றிவரும் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். யோகாசனத்தைப் பரப்புவதில் இந்த மிஷன் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். வாழ்க்கை முறை தொடர்பான நோய்களையும், பெருந்தொற்றுகளையும் எதிர்த்து உலகம் போராடும்  இன்றைய வேகமான மற்றும் அழுத்தங்கள் நிறைந்த வாழ்க்கை முறையில், சஹஜ மார்க்கம், மனநிறைவு நிலை, யோகாசனம் போன்ற பயிற்சிகள் உலகிற்கு நம்பிக்கை விளக்குகளாக உள்ளன என்று அவர் கூறினார்.

கொரோனா பாதிப்பு சூழலை இந்தியா கையாளும் விதம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் 130 கோடி மக்களின் விழிப்பான நிலை, உலகிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார். வீட்டு வைத்திய முறைகள் பற்றிய அறிவு, யோகா, ஆயுர்வேதம் ஆகியவை இதில் முக்கிய பங்காற்றின என்று அவர் குறிப்பிட்டார்.

உலக நன்மைக்காக, மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளை இந்தியா கடைபிடித்து வருகிறது என்று திரு. மோடி தெரிவித்தார். நல்வாழ்வு, உடல் நலன் மற்றும் சொத்துகளின் சமச்சீரான கலவை என்பவற்றின் அடிப்படையில் இந்த அணுகுமுறை அமைந்துள்ளது என்றார் அவர். உலகில் மிகப் பெரிய அளவிலான மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியா செயல்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்தார். ஏழைகளுக்கு கண்ணியமான வாழ்க்கையையும், வாய்ப்புகளையும் தருவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எல்லோருக்கும் கழிவறை வசதி அளித்தல் முதல் சமூக நலத் திட்டங்கள் வரையில், புகையில்லா சமையலறைகள் முதல் வங்கி சேவை பயன்படுத்தாதவர்களுக்கு வங்கி சேவை கிடைக்கச் செய்தது வரை, தொழில்நுட்பத்தை அணுகும் வசதி முதல் அனைவருக்கும் வீடு கிடைக்கச் செய்தல் வரை, இந்தியாவின் பொது நலன் சார்ந்த திட்டங்கள் ஏராளமான மக்களின் வாழ்க்கையைத் தொடுபவையாக அமைந்துள்ளன என்று பிரதமர் கூறினார்.

உடல் நலனில் இந்தியா செலுத்தி வரும் கவனம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், உடல் நலன் என்பது நோயைக் குணமாக்குதல் என்பதையும் தாண்டியது என்ற சிந்தனையை இந்தியா கடைபிடித்து வருகிறது என்று தெரிவித்தார். இந்தியாவின் மேன்மையான சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகமான மக்கள் பயன்பெறுவதாக அவர் கூறினார். உலகில் மிகப் பெரிய அளவிலான சுகாதாரத் திட்டமாக இது உள்ளது. மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என அவர் பட்டியலிட்டார்.

உலக நாடுகளில் தடுப்பூசி போடும் வசதியை அளிப்பதில் இந்தியா முக்கிய பங்களித்து வருவதாகப் பிரதமர் கூறினார்.

உள்நாட்டு அளவில் உடல் நலன் என்பது மட்டுமின்றி, உலக அளவிலும் அதற்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது என்றார் அவர். சுகாதாரம் மற்றும் உடல்நலனில் உலக நாடுகளுக்கு பல விஷயங்களை இந்தியா அளிக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஆன்மிக மற்றும் உடல் நலனுக்கான சுற்றுலா மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். ஆரோக்கியமான உலகைப் படைப்பதில் நமது யோகா மற்றும் ஆயுர்வேதத் துறைகள் பெரும் பங்கு ஆற்ற முடியும் என்றார் அவர். உலக மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் இவற்றை நாம் வழங்க வேண்டும் என்பதே நமது நோக்கம் என்று பிரதமர் தெரிவித்தார்.

யோகா மற்றும் தியானம் குறித்து உலக அளவில் கவனம் அதிகரித்து வருவதை திரு. மோடி கோடிட்டுக் காட்டினார். மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்து வருவது பற்றிக் குறிப்பிட்ட அவர், மன நிறைவு நிலையை ஏற்படுத்துவதன் மூலம் இதை எதிர்கொள்ள முடியும் என்று கூறினார். ``நோயற்ற குடிமக்கள், மன ஆரோக்கியமான குடிமக்கள் இந்தியாவை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்வார்கள்'' என்று கூறி பிரதமர் நிறைவு செய்தார்.

-----



(Release ID: 1698512) Visitor Counter : 218