விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

Posted On: 13 FEB 2021 2:54PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

விவசாயிகள் விளைப்பொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தக (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020, விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) சட்டம், 2020 ஆகியவற்றை குறித்து, அவை சட்டங்களாக இயற்றப்படுவதற்கு முன் விரிவான ஆலோசனைகளை அரசு நடத்தியது.

இச்சட்டங்களின் வரைவுகள் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிதி ஆயோக் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் கருத்துகள் கேட்கப்பட்டன.

மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களிடமும் ஆலோசிக்கப்பட்டது.

விவசாயிகள் மற்றும் இதர பங்குதாரர்களிடமும் 2020 ஜூன் 5 முதல் 2020 செப்டம்பர் 17 வரை கலந்துரையாடல் கூட்டங்கள் (கொவிட்-19 காரணமாக இணையவழியில் நடத்தப்பட்டு) மூலமும் கருத்துகள் கேட்கப்பட்டன.

துடிப்புமிக்க ஒருங்கிணைந்த வேளாண் சரக்குகள் போக்குவரத்து அமைப்பை நாட்டில் உருவாக்குவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விவசாயிகள் ரதம் (கிசான் ரத்) என்னும் கைப்பேசி செயலியை அரசு அறிமுகப்படுத்தியது.

மேலும், ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, 24 வழித்தடங்களில் 208 விவசாயிகள் ரயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வெட்டுக்கிளி தாக்குதல்களால் ஏற்பட்ட பயிர் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், பயிர் கடன்களுக்கான வட்டி தள்ளுபடி ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கும், மறுசீரமைக்கப்பட்ட வானிலை சார்ந்த பயிர் காப்பீட்டு திட்டத்திற்கும் 2020-21-ஆம் ஆண்டு (2020 டிசம்பர் 31 வரை) ரூ 9799.86 கோடி செலவிடப்பட்டுள்ளது.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-19-ஆம் ஆண்டு ரூ 46,700 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2020-21 ஆம் ஆண்டு ரூ.134399.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் பணி கலாச்சாரத்தையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு புதிய மற்றும் புதுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தரவுகள் சிறப்பான முறையில் கையாளப்படுகின்றன. இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகளுக்கான ஒப்புதல் உரிய நேரத்தில் வழங்கப்படுகின்றன. நேரடி பலன் பரிவர்த்தனை மூலம் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கே நேரடியாக மானியம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697716
 

------


(Release ID: 1697766) Visitor Counter : 177