சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: மாநில/ யூனியன் பிரதேச செயலாளர்கள், அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆய்வு
Posted On:
06 FEB 2021 6:26PM by PIB Chennai
கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் மேலாண் இயக்குநர்களிடம் காணொலி வாயிலாக இன்று கேட்டறிந்தார்.
தடுப்பூசிகளை வழங்குவதில் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சிறப்பாக செயல்படுவதாகக் கூறி திரு ராஜேஷ் பூஷன் பாராட்டு தெரிவித்தார்.
21 நாட்களில் 50 லட்சம் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் போட்டு சர்வதேச அளவில் அதிவிரைவாக இதை செயல்படுத்திய நாடாக இந்தியா சாதனை படைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவிற்கு முன்னரே தடுப்பூசியை வழங்கத் தொடங்கிய நாடுகளுக்கு இந்த இலக்கை அடைய கூடுதல் நாட்கள் தேவைப்பட்டது.
எனினும் தடுப்பூசி போடும் பணிகளை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தடுப்பூசி போடுவதின் அன்றாட சராசரி எண்ணிக்கையை ஆராய்ந்து அதனை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கோவின் (CoWin) டிஜிட்டல் தளம் வாயிலாக முன்பதிவு செய்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
12 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 60 சதவீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது கட்டமாக வரும் 13-ஆம் தேதி தடுப்பூசி போடப்படவிருக்கிறது.
கோவின் டிஜிட்டல் தளத்தின் இரண்டாவது வடிவம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் திரு ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695818
------
(Release ID: 1695858)
Visitor Counter : 240