சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
வனவிலங்கு குற்றத் தடுப்பு மையம், ஜம்மு-காஷ்மீரில் நடத்திய அதிரடி சோதனையில் மிகப்பெரிய அளவில் வனவிலங்குகளின் உடல் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Posted On:
30 JAN 2021 4:34PM by PIB Chennai
வனவிலங்கு குற்றத் தடுப்பு மையம், புதுதில்லி மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கின் அனந்த்நாக் பகுதியிலும், ஜம்முவின் மன்வால் பகுதியிலும் சட்ட விரோதமான வனவிலங்கு வேட்டைகளும், வர்த்தகமும் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தில்லியிலிருந்து ஜம்மு சென்ற வனவிலங்கு குற்றத் தடுப்பு மைய அதிகாரிகள், ஜம்மு காஷ்மீர் தலைமை வனவிலங்கு காப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து ஒரே சமயத்தில் 29.01.2021 அன்று இந்த இரண்டு பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
வனவிலங்குகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்களை முடிவுக்கு கொண்டுவர தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டுவரும் வனவிலங்கு குற்றத் தடுப்பு மையத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் தமது சுட்டுரைச் செய்தியில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அனந்த்நாகில் நடைபெற்ற சோதனையில் 8 சிறுத்தை தோல்கள், 38 கரடி பித்தப்பைகள், 4 ஆண் கஸ்தூரி மான்களின் வாசனை சுரப்பிகள் ஆகியவை திரு குல் முகமது கேனி என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
5 சிறுத்தை தோல்கள், 7 சிறுத்தை நகங்கள், 8 கோரைப்பற்கள், 2 கடைவாய் பற்கள், 2 சிறுத்தை மண்டை ஓடுகள், சிறுத்தை எலும்புகள் (4 தாடை எலும்புகளும் 140 எலும்புத் துண்டுகளும்), ஒரு கஸ்தூரி மானின் பல்லும் ஜம்மு பகுதியின் மன்வாலில் திரு குஷல் ஹுசைன் பாக்டிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. 2 பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சட்டவிரோத வனவிலங்குகள் வர்த்தகத்தில் இணைந்து செயல்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவை, அண்மைக்காலங்களில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய பறிமுதலாகும். அருகிவரும் உயிரினங்களான கஸ்தூரி மானும், இமாலய கருப்பு கரடியும், பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. கஸ்தூரி மான்கள் சுரப்பிகளுக்காகவும், கரடிகள் பித்தப்பைகளுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. இது தொடர்பாக அனந்த்நாக் காவல்நிலையத்தில் ஓர் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693569
*************************
(Release ID: 1693604)
Visitor Counter : 304