பிரதமர் அலுவலகம்

உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 28 JAN 2021 7:52PM by PIB Chennai

வணக்கம், முதலில் நான் பேராசிரியர் கிளாஸ் ஸ்ச்வாப் மற்றும் உலகப்பொருளாதார அமைப்பின் மொத்தக் குழுவையும் பாராட்டுகிறேன். இந்த நெருக்கடியான காலகட்டத்திலும், இந்த முக்கியமான உலகப் பொருளாதாரத் தளத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறீர்கள். உலகப் பொருளாதாரம் எப்படி முன்னேறிச் செல்லும் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ள நிலையில், ஒவ்வொருவரின் கவனமும்  இந்த அமைப்பின் பால் திரும்புவது இயல்பே.

நண்பர்களேநெருக்கடியான கால கட்டத்திற்கு இடையே, நான்  130 கோடி மக்களிடமிருந்து நம்பிக்கை, நேர்மறையான சிந்தனை ஆகியவை பற்றிய செய்தியை கொண்டு வந்துள்ளேன்.   கொரோனா தொற்றைக் கையாளுவதில் ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் ஏற்பட்ட போதிலும், அதனைக் கையாளுவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு உலகுக்கு அதன் திறனை நிரூபித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிபுணர்கள் என்ன கூறினார்கள் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். உலகிலேயே, இந்தியாதான் கொரோனாவால் அதிக அளவுக்கு பாதிக்கப்படும் என அவர்கள் கணித்தனர். இந்தியாவில் கொரோனா சுனாமி போல பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறினர். சிலர் 700-800 மில்லியன் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றனர். சிலர், 2 மில்லியன் பேர் இறப்பார்கள் என்று  தெரிவித்தனர்.

சுகாதார கட்டமைப்புகள் அதிகம் உள்ள நாடுகளே பெரும் பாதிப்புக்கு உள்ளான போது, வளரும் நாடான இந்தியா எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்ற கவலை அனைவரிடமும் இருந்தது. ஆனால், இந்தியா சோர்வடைந்து விடவில்லை. மக்களின் தீவிர பங்கேற்புடன், இந்தியா ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வெற்றி கண்டது.

கோவிட் தடுப்பு பயிற்சி, உள்கட்டமைப்பு, மனித வள ஆற்றல், தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றின் மூலம், தொற்றைக் கண்டறிந்து, அதனைக் கட்டுப்படுத்தி, அதிகபட்சமாக மக்களைக் காப்பாற்றுவதில் முன்னோடியாக இந்தியா திகழ்ந்தது. திரு. பிரபு கூறியது போல, இன்று இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

நண்பர்களே, இந்தியாவின் வெற்றியை மற்றொரு நாட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இராது. உலகின் 18 சதவீத மக்கள் இந்தியாவில் வசித்த போதிலும், மக்களுக்கு மிகப்பெரிய சோகம் ஏற்படாமல் தடுத்து வெற்றியடைந்துள்ளோம். ஆரம்ப கட்டத்தில், முகக்கவசங்கள், பிபிஇ உபகரணங்கள் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். ஆனால், இன்று அவற்றை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.

 இன்று, உலகின் மிகப் பெரிய தடுப்பூசி போடும் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்முதல் கட்டமாக, 30 மில்லியன் சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டு வருகிறோம். 12 நாட்களில், இந்தியா 2.3 மில்லியனுக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது. அடுத்த சில மாதங்களில், 300 மில்லியன் பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

நண்பர்களே, உலகம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்தியா உள்ளது. விமானப் போக்குவரத்து தடைபட்டிருந்த நேரத்திலும், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து விநியோகத்தை இந்தியா மேற்கொண்டது. இன்று, தடுப்பூசி, அதற்கான கட்டமைப்பு பற்றிய வினாக்களுக்கு ஆன்லைன் மூலம் இந்தியா பதில் அளித்து, பயிற்சி அளித்து வருகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், மேலும் சில தடுப்பூசிகள் விரைவில் வரவுள்ளனஇதன் மூலம் உலகுக்கு பெரிய அளவில் உதவ முடியும்.

இந்தியாவின் ஆற்றல் மற்றும் வெற்றி பற்றி குறிப்பிட்ட நான், உலகப் பொருளாதாரமும் இதே போல புத்துயிர் அடையும் என உறுதி அளிக்கிறேன். தற்போதைய சூழலில், பொருளாதாரச் சூழல் வேகமான மாற்றத்தை அடையும். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொண்டு, இந்தியா பொருளாதார நடவடிக்கைகளை பராமரித்து வருகிறதுஇதன் மூலம் வேலைவாய்ப்புக்கு சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளனமுதலில் ஒவ்வொருவரது உயிரைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்திய நாங்கள், இப்போது நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியாவின் தன்னிறைவு நோக்கம், நான்காவது தொழில் புரட்சிக்கு பெரும் வலிமையை அளிக்கும்.

நண்பர்களே, தகவல் தொடர்பு, தானியங்கி முறை, செயற்கை நுண்ணறிவு அல்லது எந்திர கற்றல், விரைவான தரவுகள் என்ற நான்கு அம்சங்களில் தொழில் புரட்சி 4.0-வுக்கு இந்தியா பாடுபட்டு வருகிறதுதரவு கட்டணங்கள் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும் ஸ்மார்ட் போன்கள் இணைப்பு பரந்து விரிந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு அல்லது எந்திர கற்றல் பிரிவில் இந்தியா சிறந்து விளங்குகிறது. டிஜிட்டல் கட்டமைப்பு வளர்ந்து வருவதால், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் டிஜிட்டல் தீர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் 130 கோடி பேருக்கும் தனித்துவ ஆதார் எண்கள் உள்ளன. அவை வங்கி கணக்குகளுடனும், போன்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன. யுபிஐ மூலம் டிசம்பரில் மட்டும் 4 டிரில்லியன் ரூபாய்க்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதுதொற்று காலத்தில், 760 மில்லியன் இந்தியர்களுக்கு 1.8 டிரில்லியன் ரூபாய் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பட்டது. மக்களுக்கு தனித்துவ சுகாதார அடையாள அட்டை வழங்குவது குறித்த இயக்கத்தை இந்தியா துவங்கியுள்ளது.

நண்பர்களே, தற்சார்பு இந்தியா இயக்கம், உலக நலனுக்கும், உலக விநியோக சங்கிலிக்கும் பணியாற்ற உறுதி பூண்டுள்ளதுஎப்டிஐ நடைமுறைகளுக்கு உகந்த வரி பரிபாலன முறையை இந்தியா வழங்குகிறது. இந்தியாவின் பிரம்மாண்டமான நுகர்வோர் தளம், உலக பொருளாதாரம் மேலும் வளர உதவும்.

நண்பர்களே, தொழில்நுட்பம் என்பது, வாழ்க்கையை சிரமமில்லாமல் நடத்த உதவ வேண்டுமே அல்லாமல், அது ஒரு சிக்கவைக்கும் பொறியாக மாறிவிடக் கூடாதுநாம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் . கொரோனா நெருக்கடி, மனித குலத்தின் மதிப்பை நமக்கு உணர்த்தியுள்ளது. எனவே, நாம் அனைவரும் சேர்ந்து இதற்காக உழைக்க வேண்டும். இதில், நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

இந்த உரையுடன், நான் வினா, விடை அமர்வுக்கு நகர்கிறேன்.

நன்றி!

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பு. மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.


(Release ID: 1693562) Visitor Counter : 286