பாதுகாப்பு அமைச்சகம்
என்சிசி மாணவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சரின் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் திரு.ராஜ்நாத் சிங்
Posted On:
21 JAN 2021 5:07PM by PIB Chennai
தில்லியில் நடைபெறும் என்சிசி மாணவர்களின் குடியரசு தின விழா அணிவகுப்பு முகாமுக்கு சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், சிறப்பாக செயலாற்றிய என்சிசி மாணவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சரின் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தலைநகர் புதுதில்லியில் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தேசிய மாணவர் படையினர்(என்சிசி) பங்கேற்பர். இவர்களுக்கான ஒரு மாத முகாம் தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் நடைபெறுகிறது.
இந்த முகாமுக்கு இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சென்றார். அவரை என்சிசி தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் ஆயிச் வரவேற்றார். என்சிசி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஏற்றார்.
முகாமில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு அவர் பாதுகாப்பு அமைச்சரின் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
கொவிட் -19 தொற்று தடுக்கும் பணியில், என்சிசி யோக்தன் பயிற்சி மூலம் என்சிசி மாணவர்கள் 1,39,961 பேரும், ஊழியர்கள் 21,280 பேரும் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டது பாராட்டுக்குரியது. இந்த பணியின் போது, தேவைப்பட்டோருக்கு, உணவு, அத்தியாவசியப் பொருட்கள், முககவசம் போன்றவற்றை நீங்கள் விநியோகித்தீர்கள். என்சிசி பயிற்சிக்காக தற்போது தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது அனைத்து என்சிசி மாணவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அது பயனுள்ளதாக இருக்கிறது.
எல்லை மற்றும் கடலோர பகுதிகளில் ஒரு லட்சம் மாணவர்களை என்சிசியில் சேர்க்க வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்தாண்டு சுதந்திர தின உரையில் அழைப்பு விடுத்தார். இந்த இலக்கை என்சிசி அதிகாரிகள் குறுகிய காலத்தில் நிறைவேற்றி 1,204 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை என்சிசி-ல் சேர்த்தது பாராட்டுக்குரியது.
டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றிலும் என்சிசி அமைப்பின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. இந்த நாட்டின் இளைஞர்களை, ஒரு ஒருங்கிணைந்த மற்றும் ஒழுக்கமான சக்தியாக மாற்றுவதன் மூலம் என்சிசி, நாட்டுக்கு சிறந்த சேவையை செய்து வருகிறது.
இவ்வாறு திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690896
**********************
(Release ID: 1690978)