குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சர்வதேச ஜவுளி, ஆடை சந்தையில் முக்கிய இடம் வகிக்க நவீன தொழில்நுட்பங்களுடன், நமது தொழிலாளர்களுக்கு கூடுதல் திறன்களும், வழங்கப்பட வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 21 JAN 2021 2:01PM by PIB Chennai

ஏற்றுமதியில் போட்டியை அதிகரிக்கவும், சர்வதேச சந்தையில் முக்கிய இடம் வகிக்கவும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஜவுளி, ஆடைத் தொழிலாளர்களுக்கு கூடுதல் திறனை வழங்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தியுள்ளார். கச்சாப் பொருட்களிலும், மனித ஆற்றலிலும் நாம் வலுவான அடித்தளம் அமைத்துள்ள போதும், சராசரி நிறுவனங்களின் சிறிய அளவுகளாலும், காலம் கடந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாலும் சர்வதேச ஆடை ஏற்றுமதியில் நாம் பின் தங்கியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

ஆடை ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சிலின் (ஏஇபிசி) காணொலித் தளத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், “ஆடை உற்பத்தி நிறுவனங்களின் சராசரி அளவை அதிகரித்து, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, திறன்வாய்ந்த மனித ஆற்றலை உபயோகிக்கும் வரையில், தரமான பொருட்களை நம்மால் தயாரித்து, போட்டித் தன்மையிலான விலைகளில் ஏற்றுமதி செய்ய இயலாது. இந்தப் பாதையில் மட்டுமே வேலை வாய்ப்புகளையும், தொழில்துறையின் பொருளாதார ஆற்றலையும் நம்மால் முழுமையாகப் பயன்படுத்த முடியும்”, என்று அவர் கூறினார்.

 

சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் மிகச் சிறந்த திட்டமாக திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாடு நிதியுதவித் திட்டம் அமைகிறது என்று பாராட்டிய அவர், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் இந்தத் திட்டத்தின் பலன்களைக் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மிகச்சிறந்த முன் முயற்சியாக இதனைக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் இந்திய ஆடை ஏற்றுமதிகளை உலகளவில் ஊக்குவிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இத்துறையின் அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி, முனைப்புடன் செயலாற்றி ஜவுளித்துறையில் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் பாராட்டினார்.

சர்வதேச ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு வெறும் 6% மட்டுமே என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், சர்வதேச போட்டியாளர்களுக்கு இணையாக சிறு தொழில் நிறுவனங்களின் தரத்தையும், வர்த்தகத்தையும் அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690815

******

(Release ID: 1690815)(Release ID: 1690883) Visitor Counter : 95