குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வேளாண் துறையில் திறமைசாலிகள் வெளியேற்றத்தை தடுக்கவும், படித்த இளைஞர்களை ஈர்க்கவும் நடவடிக்கைகள் தேவை: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 19 JAN 2021 5:41PM by PIB Chennai

வேளாண் துறையில், அறிவாளிகள், திறமைசாலிகள் வெளியேற்றத்தைத் தடுக்கவும், விவசாயத் தொழிலுக்கு படித்த இளைஞர்களை ஈர்க்கவும் நடவடிக்கைகள் தேவை என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.  தொழில் நுட்பம் சார்ந்த வேளாண் முறைகளைக் கடைபிடிக்கும், விசயம் தெரிந்த நவீன சிந்தனையுடைய விவசாயிகள் கைகளின் தான் இந்திய வேளாண்மையின் எதிர்காலம் இருப்பதாக அவர் கருத்து தெரிவித்தார்.

‘‘2030ம் ஆண்டை நோக்கி இந்திய விவசாயம்: விவசாயிகள் வருமானம், ஊட்டச்சத்து பாதுகாப்பு, நிலையான உணவு அமைப்பு ஆகியவற்றை அதிகரிப்பதற்கான வழிகள்’’ என்ற தலைப்பில்  தேசிய அளவிலான பேச்சுவார்த்தை நிகழ்வுக்கு நிதி ஆயோக், மத்திய வேளாண் அமைச்சகம், உணவு மற்றும் வேளாண் இயக்கம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்த. காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு பேசியதாவது:

இந்திய விவசாயத்தின் எதிர்காலம், தகவல் அறிந்த நவீன விவசாயிகளால்  மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பம் சார்ந்த விவசாய முறைகளில்தான்  இருக்கிறது. படித்த இளைஞர்களிடம் விவசாயத்தின் மீதான ஆர்வம் குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதிக செலவில் குறைந்த வருவாய் கிடைப்பதால்தான், இளைஞர்கள் இந்தத் தொழிலை அதிகம் விரும்புவதில்லை. இந்த சமூகப் பொருளாதார சூழலை மாற்ற வேண்டும்.

வலுவான விவசாய பரிசோதனை கூடங்களை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் விவசாயி மற்றும் தொழில் துறையினர் இடையே தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.  இத்துறைக்கு வர விரும்பும் விவசாயிகளுக்கு வழிகாட்ட  தொழில் வளர்ப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

விவசாய உற்பத்தி செலவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இதைக் குறைப்பதற்கான  வழிகளை கொள்கைகள் உருவாக்குபவர்களும், இதர தரப்பினரும் காண வேண்டும்.  இயற்கை  விவசாயத்தை மிகப் பெரிய ளவில் மேற்கொள்ள வேண்டும். இது நுகர்வோருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும்.  இயற்கை விவசாயம், நாட்டை வளமாக்க மட்டும் அல்ல ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் மிகப் பெரிய இயக்கம்.

2019-20ம் ஆண்டில், கொவிட்-19 தொற்று சூழ்நிலையிலும், உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு பாராட்டுக்கள்.

இவ்வாறு திரு எம். வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690052

**************************



(Release ID: 1690134) Visitor Counter : 204