உள்துறை அமைச்சகம்

சூரத் மெட்ரோ, அகமதாபாத் மெட்ரோவின் இரண்டாம் கட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியது இரு நகரங்களின் மக்களுக்கும் முக்கிய நாளாகும்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 18 JAN 2021 6:13PM by PIB Chennai

சூரத் மெட்ரோ மற்றும் அகமதாபாத் மெட்ரோவின் இரண்டாம் கட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியது இரு நகரங்களின் மக்களுக்கும் முக்கிய நாளாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார். சூரத் மெட்ரோ, அகமதாபாத் மெட்ரோவின் இரண்டாம் கட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புது தில்லியில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் திரு அமித் ஷா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, குஜராத்தின் நகர்ப்புற உள்கட்டமைப்பை இந்த இரு திட்டங்களும் மேலும் வலுப்படுத்தும் என்று கூறினார். திரு நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டத்தை மக்கள் முன் வைத்ததோடு, தமது பதவிக்காலம் நிறைவடைவதற்குள் அதை செய்து முடித்தார் என்று திரு ஷா கூறினார்.

குஜராத்தின் இரு லட்சியமிக்க திட்டங்கள், திரு நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் காலத்தில் அவரால் தொடங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

அகமதாபாத் மற்றும் சூரத் மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், இந்த முக்கிய திட்டங்களின் பலனாக குஜராத் விரைவாக வளர்ச்சியடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டு மக்கள், பிரதமர் திரு நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். குஜராத்தை போன்றே, நாட்டின் கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் முழு வளர்ச்சி அடைவதற்கான அடிக்கல்லை நாட்டும் பணியை பிரதமர் தொடங்கியிருக்கிறார் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689723

**********************


(Release ID: 1689773) Visitor Counter : 114