மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பொறியியல் வரைகலைப் பிரிவின் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான மென்பொருள் கொலேப்கேட்

Posted On: 13 JAN 2021 4:38PM by PIB Chennai

கொலேப்கேட் சாஃப்ட்வேர் என்னும் ஒருங்கிணைந்த மென்பொருள் அமைப்பை மத்திய உயர்நிலை கல்வி வாரியத்துடன் (சிபிஎஸ்ஈ) இணைந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய தகவல் மையம் (என்ஐசி) வெளியிடுகிறது.

இரு பரிமாண வரைவுகள், விவரங்கள் மற்றும் முப்பரிமாண பொருள் வடிவமைப்பு உள்ளிட்ட பொறியியல் வரைகலை பிரிவின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முழுமையான பொறியியல் தீர்வுகளை வழங்குவதற்கான மென்பொருளாக இது இருக்கும்.

கொலேப்கேட் முப்பரிமாண மாதிரியியல் குறித்த விரிவான மின்-புத்தகத்தையும் தேசிய தகவல் மையம், மத்திய உயர்நிலை கல்வி வாரியம், நிதி ஆயோக் ஆகியவை இணைந்து வெளியிடும்.

கொலேப்கேட் தளத்தின் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவதற்கு தயாராக உள்ள இந்த மின்-புத்தகம் 1.0, கொலேப்கேட் பற்றிய புரிதலை கேட் மாணவர்கள், பயிற்சியை தொடங்குபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கும். தேசிய தகவல் மையம், புதுதில்லியின் கொலேப்கேட் குழுவால் இது வடிவமைக்கப்பட்டு இயற்றப்பட்டது.

முப்பரிமாண டிஜிட்டல் வடிவமைப்புகளை படைப்புத்திறனோடும், கற்பனையோடும் உருவாக்கவும், மாற்றங்களை செய்யவும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு இது உதவும். வடிவமைப்புகளில் இணைந்து பணியாற்றவும், தரவுகளின் சேமிப்பு, காட்சிப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் இந்த மென்பொருள் உதவும்.

திரு மனோஜ் அஹுஜா  தலைமையிலான சிபிஎஸ்ஈ, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொறியியல் வரைகலைகளுக்கான கொலேப்கேட் மென்பொருளை (பாட குறியீடு 046) அறிமுகப்படுத்தும்.

2021 ஜனவரி 14 அன்று காலை 11 மணிக்கு https://webcast.gov.in/nic  என்னும் இணைய முகவரியிலும், என்ஐசியின் சமூக வலைதளப் பக்கங்களிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688270

***(Release ID: 1688343) Visitor Counter : 6