பிரதமர் அலுவலகம்

கோவிட் 19 நிலை மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பாக நடைபெற்ற முதலமைச்சர்களுடனான கூட்டத்தின் முடிவில் பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 11 JAN 2021 8:02PM by PIB Chennai

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து மற்றும் உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து செலுத்தும் இயக்கம் குறித்து நாம் விரிவாகப் பேசியுள்ளோம். மாநிலங்களில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களிடமிருந்து நல்ல ஆலோசனைகள் கிடைத்துள்ளன. மத்திய அரசும், மாநிலங்களும் இணைந்து, ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு செயல்பட்டதென்பது, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. இந்தப் போராட்டத்தின் மூலமாக நாம் சிறந்ததொரு கூட்டாட்சிக்கு உதாரணமாகத் திகழ்கிறோம்.

நண்பர்களே,

நம் நாட்டில் முன்னாள் பிரதமர் மறைந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் நினைவு நாளாகும். இன்று நான் அவருக்குப் புகழஞ்சலி செலுத்துகிறேன். 1965 ஆம் ஆண்டில் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் ஆட்சிப் பணிகள் குறித்த மாநாடு ஒன்றில் கூறிய முக்கிய கருத்து ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். " ஆளுமை என்பதன் அடிப்படை, நம் சமுதாயத்தைக் கட்டுக்கோப்புடன் வைத்து சில குறிக்கோள்களை நோக்கி வழிநடத்திச் சென்று அதை வளர்ச்சியுறச் செய்வதாகும். இந்தப் பரிணாம வளர்ச்சிக்கும், வழிமுறைக்கும் உதவுவதே அரசின் பணியாகும்". கொரோனா நெருக்கடி காலத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம் என்பது எனக்கு திருப்தி தருகிறது. நாம் லால் பகதூர் சாஸ்திரி அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் பின்பற்ற முயன்றோம். உணர்வுபூர்வமாக பல முடிவுகளை விரைவாக எடுத்தோம். தேவையான ஆதாரங்களைத் திரட்டினோம். நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வளித்தோம். அதனால்தான் உலகின் மற்ற பகுதிகளில் பரவியது போல, இந்தியாவில் அதிக அளவில் கொரோனாபரவவில்லை. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நாட்டு மக்களிடம் இருந்த அச்சம் இப்போது இல்லை. இருந்தபோதும் நாம் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது. மக்களிடையே நம்பிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பொருளாதாரச் செயல்பாடுகள் மூலமாக நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இரவு பகலாக உழைக்கும் மாநில நிர்வாகங்களுக்கு எனது பாராட்டுகள்.

நண்பர்களே,

தற்போது தடுப்பூசி போடும் கட்டம். உலகில் மிகப்பெரிய தடுப்பூசி போடும் இயக்கத்தை 16 ஜனவரி 2021 முதல் நாம் தொடங்க இருக்கிறோம். அவசரகால அங்கீகாரம் பெறப்பட்ட இரண்டு தடுப்பு மருந்துகளும் இந்தியாவில் தயாரிக்கப் பட்டது என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். மேலும் நான்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணியில் முதல் சுற்று 60 முதல் 70 சதவீதம் முடிவடைந்தவுடன் நாம் மீண்டும் விவாதிக்கலாம். அதற்குள் மேலும் நிறைய தடுப்பு மருந்துகள் கிடைக்கும். அப்போது நாம் மேலும் சிறந்த வருங்காலத் திட்டங்களை வகுக்க முடியும். இரண்டாவது கட்டத்தில் நாம் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து போடுவதைப் பற்றி யோசிக்கலாம்.

நண்பர்களே,

தடுப்பூசி போடும் போது அனைத்து விதமான முன்னெச்சரிக்கைகளையும் நிபுணர்கள் எடுத்து வருகிறார்கள். அறிவியல் சமூகத்தின் அறிவுரையின் அடிப்படையில்தான் நாம் எந்த முடிவையும் எடுப்போம் என்று முதல்வர்களிடம் நான் இது தொடர்பாக எப்போது பேசும்போதும் குறிப்பிட்டிருக்கிறேன். “உலகில் பல இடங்களில் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டு விட்டாலும் இந்தியா இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறதுஎன்றெல்லாம் பலர் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் அறிவியல் சமூகத்தின் அறிவுரையின்படி தான் நாம் நடக்க வேண்டும் என்பதே நமது கண்ணோட்டமாக இருந்தது. உலகின் மற்ற தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில் நமது தடுப்பு மருந்துகள் மிகக்குறைந்த செலவிலானதாக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். இந்திய மக்களின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்தியாவில் தடுப்பு மருந்துகள் போடும் முறைகள் உள்ளன தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைவது குறித்த முறைகளும் இந்திய அனுபவமாக உள்ளது. இவையனைத்தும் கொரோனா தடுப்பு ஊசி போடும் இயக்கத்திற்கு மிகவும் பயனளிக்கும்.

நண்பர்களே,

தடுப்பூசி போடும் திட்டத்தில் யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதுபற்றி அனைத்து மாநிலங்களுடன் கலந்துரையாடிய பிறகுதான் முடிவெடுக்கப்பட்டது.

நாட்டு மக்களுக்காக இரவு பகல் பாராது உழைக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி அளிக்க வேண்டும் என்பதே நமது முயற்சியாகும். தூய்மைப் பணியாளர்கள், களத்தில் முன்னணியில் நின்று பணிபுரிபவர்கள், இராணுவப் படையினர், காவல் துறையினர், மத்திய பாதுகாப்புப் படையினர் ஊர்க்காவல் படையினர், பேரிடர் மீட்புக் குழுவினர், கொரோனா கட்டுப்பாட்டு கண்காணிப்பு பகுதிகளில் பணியாற்றும் வருவாய் அலுவலர் உட்பட அனைத்து பொதுமக்கள் பாதுகாப்பு பணியாளர்கள் என இவர்கள் அனைவருக்கும் முதல்கட்டமாக தடுப்பு மருந்து போடப்படும். சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள் எண்ணிக்கை சுமார் 3 கோடி. இவர்களுக்கு தடுப்பு மருந்து போடுவதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும்.

 

நண்பர்களே,

அடுத்த கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 50 வயதுக்குக் குறைவானவர்களுக்கு அவர்களுக்கு ஏற்கனவே நோய் இருந்தால் அவர்களுக்கும், தொற்றுநோய் பாதிக்கக்கூடிய அதிக அளவு அபாயம் உள்ள நிலையில் இருப்பவர்களுக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்படும். தடுப்பு மருந்தை மக்களுக்கு அளிப்பதற்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் குறித்தும் முறையான கூட்டங்கள் நடத்தப்பட்டு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசிக்கப்பட்டு முறைப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பு மருந்து போடப்படும் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு விட்டது. தற்போது இதற்கான எஸ்ஓபி, தயாரிப்பு ஆகியவற்றை நம்முடைய அனுபவங்களுடன் இணைக்க வேண்டும். தட்டம்மை, ரூபெல்லா போன்ற நோய்களுக்கு எதிராக நாம் விரிவான இயக்கங்கள் நடத்தியிருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் உள்ளவர்களும் தேர்தல்களில் வாக்களிக்கக் கூடிய வகையில் சிறந்த கட்டமைப்பை உருவாக்கி உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்திய அனுபவமும் நமக்கு உண்டு.

அந்த அனைத்து அனுபவங்களையும் கொரோனா தடுப்பு ஊசி போடும் இயக்கத்திலும் நாம் நடைமுறைப்படுத்தலாம்.

நண்பர்களே,

இந்த தடுப்பு மருந்து செலுத்தும் இயக்கத்தின் முக்கியமான பணி, தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டியவர்களை அடையாளம் காண்பதும், அவர்களைக் கண்காணிப்பதுமேயாகும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதற்காக டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது இதன் பெயர் கோவின் (Co WIN). ஆதார் எண்ணின் மூலம் பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இரண்டாவது டோஸ் மருந்தும் தக்க சமயத்தில் கொடுக்கப்படும். இந்த டிஜிட்டல் தளத்தில் அனைத்து தரவுகளும் உரிய காலத்தில் பதிவிட வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். முதலாவது தடுப்பு மருந்து போடப்பட்ட பிறகு டிஜிட்டல் தடுப்பு மருந்து சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். இதற்கென அவர் மீண்டும் வரத் தேவையில்லை.

நண்பர்களே,

உலகின் பல நாடுகள் இந்தியா எப்படி தடுப்பூசி மருந்து போடும் இயக்கத்தை நடத்துகிறது என்று கவனித்துக் கொண்டிருக்கின்றன. எனவே நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உலகின் 50 நாடுகளில் மூன்று நான்கு வாரங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உலகில் 25 மில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்து ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி மக்களுக்கு நாம் தடுப்பு மருந்து செலுத்த வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்து விட்டோம்.

நண்பர்களே,

தடுப்பு மருந்து போடும் சமயத்தில் நாம் கண்டிப்பாக கோவிட் காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். தடுப்பு மருந்து, தடுப்பு மருந்து செலுத்துவது தொடர்பாக எந்தவித வதந்திகளையும் பரப்பக் கூடாது என்பதை ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் உறுதி செய்ய வேண்டும். நாட்டு மக்களுக்கு சரியான தகவலை நாம் அளிக்க வேண்டும். நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித் திட்டம், சுய உதவிக் குழுக்கள், ரோட்டரிலயன்ஸ் அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம், இதர அமைப்புகள் போன்ற சமூக அமைப்புகளையும், மதம் சார்ந்த அமைப்புகளையும் நாம் இந்த இயக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும். அதேசமயம் சுகாதாரம், உடல் நலம் தொடர்பாக இதுவரை தடுப்பு மருந்து இயக்கங்கள் மேற்கொண்டுவரும் பணிகளையும் நாம் முறையாக நடத்திச் செல்ல வேண்டும். 16 ஜனவரி அன்று கொரோனா தடுப்பு மருந்து போடும் இயக்கம் தொடங்குகிறது என்பது நமக்கு தெரியும் ஆனால் அதே சமயம் 17 ஜனவரி அன்று வேறு ஏதேனும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டிய நிலை இருந்தால் அதுவும் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

 

இறுதியாக நான் மற்றொரு முக்கியமான விஷயம் குறித்து உங்களுடன் பேசவேண்டும். நாட்டின் 9 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகியவற்றில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கால்நடைத் துறை அமைச்சகம் பறவைக்காய்ச்சலை எதிர்கொள்வது குறித்து விரிவான செயல்திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இதை உடனடியாக முறைப்படி பின்பற்ற வேண்டும். மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒவ்வொரு மாநில முதல்வரும் தங்களது மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள் மூலமாக மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இன்னும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்படாத மாநிலங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நீர் நிலைகள், பறவைச் சந்தைகள், உயிரியல் பூங்காக்கள், கோழிப்பண்ணைகள் போன்றவற்றைச் சுற்றியுள்ள இடங்களிலும் அனைத்து மாநிலங்களும், உள்ளாட்சி நிர்வாகங்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் பறவை காய்ச்சலை உடனடியாகக் கண்டறிந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். வனத்துறை, சுகாதாரத்துறை, கால்நடைத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டால் பறவைக் காய்ச்சலைத் தடுக்க முடியும். பறவைக் காய்ச்சல் பற்றிய வதந்திகள் பரவாமல் தடுக்க வேண்டும். நாம் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலில் இருந்தும் நாட்டைக் காக்கும்.

 உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 60 சதவிகித பணி முடிந்ததும் நாம் மீண்டும் சந்திப்போம். புதிய தடுப்பு மருந்துகளையும் கணக்கிலெடுத்துக்கொண்டு அப்போது மீண்டும் விரிவாக விவாதிப்போம்.

நன்றிகள் பற் பல.

பிரதமரின் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது இது பிரதமர் உரையின் மொழிபெயர்ப்பின் சாராம்சம்

***********************



(Release ID: 1688065) Visitor Counter : 324