சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

சிறப்பாக நிர்வகிக்கப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு விருதுகள்: திரு பிரகாஷ் ஜவடேகர்

Posted On: 11 JAN 2021 6:51PM by PIB Chennai

நாட்டிலுள்ள 146 தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயங்களின் நிர்வாக செயல்திறன் மதிப்பீட்டை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் துறைகளின்  அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். தற்சமயம் நாட்டிலுள்ள 903 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இந்தியாவின் மொத்த பரப்பளவில் 5 சதவீதம் அளவுக்கு இருக்கின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பங்களிப்பை அளவிடுவதற்காக அவற்றின் நிர்வாக செயல்திறனை மதிப்பிடுவது அவசியமாகிறது.

நிகழ்ச்சியில் பேசிய திரு ஜவடேகர், மற்ற நாடுகளால் சாதிக்க முடியாததை இந்தியா சாதித்து இருக்கிறது என்று மிகவும் துடிப்பான பல்லுயிராக்கம் நமது நாட்டில் இருக்கிறது என்றும் கூறினார். "உலகின் மொத்த புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில் இருக்கின்றன, உலகின் மொத்த ஆசிய சிங்கங்களில் 70 சதவீதம் இந்தியாவில் இருக்கின்றன. அதே போல், உலகில் உள்ள மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கையில் 60 சதவீதம் இந்தியாவில் இருக்கின்றன. இந்தியாவின் துடிப்புமிக்க பல்லுயிராக்கத்திற்கு இது ஒரு சான்றாகும். உணவுச் சங்கிலியின் உச்சியில் இந்த விலங்குகள் இருப்பதால் அவற்றின் வளர்ந்துவரும் எண்ணிக்கை ஒட்டுமொத்த சூழலியலின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துகிறது," என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கூறினார்.

நாட்டில் உள்ள 10 சிறந்த தேசிய பூங்காக்கள், ஐந்து கடலோர மற்றும் கடல் பூங்காக்கள், ஐந்து சிறந்த உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றுக்கு இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் தரவரிசை இடப்பட்டு, விருதுகள் வழங்கப்படும் என்று திரு ஜவடேகர் கூறினார்.

மிகவும் முக்கியமான ஆவணமான சரணாலயங்களின் நிர்வாக செயல்திறன் மதிப்பீடானது, வனவிலங்குகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் குறித்த விஷயங்களில் மதிப்புமிக்க வழிகாட்டுதலை அளிக்கும்.

------

(Release ID: 1687688)(Release ID: 1687736) Visitor Counter : 131