நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

இந்திய தர நிர்ணய அமைப்பின் பொம்மைகள் சோதனை ஆய்வகங்கள் : தொடங்கி வைத்தார் திரு பியூஷ் கோயல்

Posted On: 07 JAN 2021 2:19PM by PIB Chennai

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், வர்த்தகம், தொழில் மற்றும் ரயில்வேத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், ஜனவரி 6-ஆம் தேதியன்றுஇந்திய தர நிர்ணய அமைப்பின் 74-வது நிறுவன தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்இந்திய தர நிர்ணய அமைப்பு தனது மூன்று ஆய்வகங்களில் தயாரித்துள்ள பொம்மைகளை தரப்பரிசோதனை செய்யும் வசதிகளை அவர் தொடங்கி வைத்தார்மதிப்பீடு, ஹால்மார்க்கிங், தரக் கட்டுப்பாடு குறித்த சான்றிதழ் பாடப்பிரிவுகளையும்  அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்திய தர நிர்ணய அமைப்பின் நவீன வசதிகளைப் பாராட்டிய அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்திய தர நிர்ணய சான்றை  பொம்மைகளுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள இந்தத் தருணத்தில் அதற்கு ஏதுவாக இந்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். சிறு மற்றும் குறு நிறுவனங்களை உள்ளடக்கிய சுமார் 5000 தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்வதற்கு இந்த சோதனை வசதிகள் உதவியாக இருக்கும். இந்தத் தொழில் துறை, வெளிநாட்டு தயாரிப்பாளர்களுடன் போட்டியிட முடியும் என்றும் குறைந்த தரத்தில் ஏராளமான பொம்மைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் போக்கைக் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். பொம்மைகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளும்அதன் வாயிலாக குழந்தைகளின் சுகாதாரம் பாதிக்கப்படுவதும் இந்த நடவடிக்கையால் தடுக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுடன் இந்தியப் பொருட்கள் போட்டியிடும் வகையில் இந்திய பொம்மை தொழில்களுக்குத் தேவையான ஆதரவையும் உதவியையும் அரசு வழங்க விரும்புவதாக அவர் கூறினார். இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளின் விலை குறைவாக இருந்தபோதிலும் அதனால் நாளடைவில் பெரும் சுகாதார கேடு ஏற்படக்கூடும்.

மனித வாழ்க்கையின் அத்தியாவசியப் பாதுகாப்பு சாதனமான தலைக்கவசத்திற்கு இந்திய தர நிர்ணய அமைப்பு சோதனை வசதிகளைத் தயாரித்து வருவதையும் அமைச்சர் பாராட்டினார். சந்தையில் விற்பனை செய்யப்படும் தலைக்கவசங்கள் முறையான தரத்துடன் இருப்பதை உறுதி செய்வதற்காக தலைக்கவசங்களுக்கு தர நிர்ணய சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்திய தர நிர்ணய அமைப்பின் மதிப்பீடு, ஹால்மார்க்கிங், தரக் கட்டுப்பாடு குறித்த சான்றிதழ் பாடப்பிரிவு பற்றிய அறிவிப்பையும் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்த அமைப்பின் நிறுவன இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் லால் சி வெர்மனின் உருவச் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686756

****

(Release ID: 1686756)



(Release ID: 1686792) Visitor Counter : 182