பிரதமர் அலுவலகம்

கடல்சார் பொருளாதாரம், தற்சார்பு இந்தியாவுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கப் போகிறது: பிரதமர்


கடலோரப் பகுதிகள் மேம்பாடும், மீனவர்களின் நலனும் அரசின் முக்கிய முன்னுரிமை : பிரதமர்

Posted On: 05 JAN 2021 4:28PM by PIB Chennai

கடலோரப் பகுதிகளின் மேம்பாடும், கடினமாக உழைக்கும் மீனவர்களின் நலனும் அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.  கடல்சார்  பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுத்துதல், கடலோரப் பகுதிகளின் கட்டமைப்பை மேம்படுத்துதல், கடல்சார் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கிய கடலோர பகுதி மேம்பாட்டின் பன்முகத் திட்டத்தைக் குறித்து அவர் எடுத்துக் கூறினார்.  கொச்சி- மங்களூரு இடையேயான குழாய்வழி இயற்கை எரிவாயுத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தபின் அவர் உரையாற்றினார்.

 

கேரளா, கர்நாடகா என்ற இரண்டு கடலோர மாநிலங்களின் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதால்அவர் கடலோரப் பகுதி மேம்பாட்டின் விரைவான மற்றும் நடுநிலையான தொலை நோக்கு குறித்து விரிவாகப் பேசினார்.  கர்நாடகா, கேரளா மற்றும் இதர தென்  இந்திய மாநிலங்களில், கடல்சார் பொருளாதாரத்தின் மேம்பாட்டுக்கு விரிவான திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.  தற்சார்பு இந்தியாவுக்கு கடல்சார் பொருளாதாரம் முக்கிய ஆதாரமாக இருக்கப்போகிறது என்றும் அவர் தெரிவித்தார். பன்முக இணைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன், துறைமுகங்களும், கடலோர சாலைகளும் இணைக்கப்படுகின்றன.  நமது கடலோரப் பகுதியை, எளிதான வாழ்க்கை மற்றும் எளிதாக தொழில் செய்வதற்கு முன் மாதிரியாக மாற்றும் நோக்குடன் தாம் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

 

மீனவர்கள் கடலைச் சார்ந்து மட்டும் இல்லாமல், அதன் பாதுகாவலர்களாகவும் உள்ளனர் என்ற பிரதமர், கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும், வளப்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று தெரிவித்தார். தேவைக்கேற்ப கடலோர கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு உதவுதல், தனி மீன்வளத்துறை, எளிய கடன்கள் அளித்தல், மீன் வளர்ப்பில் ஈடுபடுவர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் தொழில் முனைவோர்களுக்கும், மீனவர்களுக்கும் உதவுகின்றன. 

சமீபத்தில் தொடங்கப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்ஸ்ய சம்பதா திட்டம் குறித்து பிரதமர் பேசினார். இத்திட்டம் கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்களுக்கு நேரடியாகப் பலன் அளிக்கிறது. மீன்வளம் தொடர்பான ஏற்றுமதியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. தரமான கடல் உணவு மையமாக இந்தியாவை மாற்றும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. கடற்பாசி தயாரிப்பில் விவசாயிகள் ஊக்கப்படுத்தப்படுவதால், அதிகரித்து வரும் கடற்பாசி தேவையை நிறைவேற்றுவதில் இந்தியா முக்கிய பங்காற்றும்.

***********



(Release ID: 1686294) Visitor Counter : 280